2018 ல் மட்டு வவுணதீவு காவல்துறையினர் படுகொலை : பிழையான தகவல் வழங்கிய காவல்துறை பரிசோதகர் சிக்கினார்
மட்டக்களப்பு(batticaloa) வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு காவல்துறை உத்தியோகத்தர்களை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியம் கொலை செய்த சம்பவம் தெடார்பில் பிழையான தகவலை வழங்கிய சம்பவத்தில் அப்போது மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் காவல் நிலையத்தில் கடமையாற்றிவருபவருமாக காவல்துறை பரிசோதகர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை (21) சிஐடி யினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது சம்பவத்தின் பின்னணி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இரண்டு காவல்துறையினர் படுகொலை
கடந்த 2018 நவம்பர் 29 ம் திகதி வவுணதீவு வலையிறவு காவல்துறை சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இருந்த காவல்துறை சாஜன்ட்நிரோசன் இந்திரபிரசன்னா, மற்றும் காவல்துறை கொஸ்தாபர் டினேஸ் ஆகிய இருவரை இனந் தெரியாதவர்கள் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்து அவர்களின் கைத் துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த அஜந்தன் என்பவர் பாவித்து வந்த ஜக்கட் பாலத்தின் கீழ் வீசி எறிந்து கிடப்பதாகவும் அவர் இந்த படுகொலையை செய்ததாக அரச மற்றும் புலனாய்வு பிரிவினர் அறிக்கையிட்டதையடுத்து அவரை கடந்த 2018 நவம்பர் 30 ம் திகதி காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னாள் போராளி கைதும் விடுதலையும்
இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹ்ரானின் சாரதியான முகமது சர்ப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ். நில்காம் ஆகிய 4 பேரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர்
கண்டறியப்பட்ட உண்மை - சிக்கிய காவல்துறை அதிகாரி
தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த காவல்துறையினர் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பவம் மூடிமறைக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் காவல் நிலையத்தில் கடமையாற்றிவருபவருமான காவல்துறை பரிசோதகர் ஒருவரை சிஐடி யினர் கொழும்புக்கு விசாரணைக்கு நேற்று திங்கட்கிழமை (21) அழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 8ம் திகதி மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை சிஐடி யினர் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
