சிறிலங்கா கடற்படையினரின் பாரிய கொள்ளை அம்பலம்
யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தாம் விசாரணை மேற்கொள்வதாகத் தெரிவித்து கடையொன்றில் பெருமளவு பணத்தை கொள்ளையடித்த சிறிலங்கா கடற்படை வீரர்கள் நால்வரை வெள்ளவத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (03) பிற்பகல் வெள்ளவத்தையில் உள்ள கடை உரிமையாளர் ஒருவர் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடைகளை பரிசோதிப்பதாகக் கூறி வந்த சிலர் தனது கடையிலிருந்த ஆறு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பணத்தையும் கையடக்கத் தொலைபேசியையும் திருடிச் சென்றதாக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறிலங்கா கடற்படை வீரர்கள்
முறைப்பாடு தொடர்பில் வெள்ளவத்தை காவல்துறையினர் அந்த பகுதியில் தங்கியிருந்த நால்வரை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளின் போது அவர்கள் சிறிலங்கா கடற்படையினர் என தெரியவந்துள்ளது.
இந்த நான்கு சந்தேக நபர்களுடன் காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிப்பாய் ஒருவரும் இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதுடன் சந்தேகநபர்கள் இராணுவ சிப்பாயின் அடையாள அட்டையை வழங்கி கடைக்குள் பிரவேசித்துள்ளனர்.
தப்பியோடிய விசேட அதிரடிப்படை சிப்பாய்
எனினும், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது தப்பியோடிய விசேட அதிரடிப்படை சிப்பாய் இன்று பிற்பகல் காவல்துறை விசேட அதிரடிப்படை தலைமையகத்தில் சரணடைந்ததுடன், பின்னர் சந்தேகநபர்கள் வெள்ளவத்தை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஏனைய சந்தேக நபர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதித்துறை காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் அனைவரின் வங்கி கணக்கு பதிவுகளையும் பெற்றுக்கொள்ளுமாறும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |