காவல்துறையினரின் தாக்குதல்: இளம் குடும்பஸ்தர் வைத்தியசாலையில்..
வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் காவல்துறையினர் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்றைய தினம்(15) இடம்பெற்றுள்ளது.
அதன்போது, வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒருபிள்ளையின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல்
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போது, “நேற்றைய தினம் விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் காவல்துறையினர் என்னை அழைத்தனர்.
நான் அங்கு சென்ற நிலையில் எனது தொலைபேசி கைப்பை என்பன பறிக்கப்பட்டு இரு கையிலும் விலங்கு போடப்பட்டது.
காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய காவல்துறையினரும் என்னை பிடித்து வைத்திருக்க வெளிநாட்டில் இருந்து வருகைதந்திருந்த நபர் ஒருவர் காவல் நிலையத்திற்குள் வைத்து என்னை தாக்கியிருந்தார்.
முறைப்பாடு
பின்னர் நாய்போல என்னை இழுத்துச்சென்ற அவர்கள் அந்த நபரின் வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர்.
இதன்போது, நான் பொதுமக்களின் உதவியினை நாடி பிரதான வீதியை மறித்திருந்தேன். பின்னர் மீண்டும் என்னை காவல் நிலையத்திற்குள் இழுத்துச்சென்றனர்.
அங்கு பதில் காவல்துறை பொறுப்பதிகாரி அவரது சப்பாத்து கால்களால் எனது நெஞ்சில் தாக்கினார்.
பின்னர் அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் வாக்குமூலம் பெற்றுவிட்டு காவல் நிலையத்தில் இருந்து என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.
காவல்துறையினர் தாக்கியதால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்” என்றார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தாக்கப்பட்டவரின் மனைவி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் வைத்தியசாலை காவல்துறையினரிடம் முறைப்பாடளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |