யாழ் இளைஞர்களிடம் தொடரும் காவல்துறையினரின் அடாவடி : வேடிக்கை பார்க்கும் அரசு
யாழில் வீதியில் சென்ற இளைஞர்களுடன் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “நேற்றிரவு யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் காரில் வவுனியா நோக்கி பயணித்துள்ளனர்.
மாங்குளம் காவல்துறையினர்
இதன்போது மாங்குளம் காவல்துறையினர் அவர்களை வழிமறித்த நிலையில், வழி மறிக்கும் போது டோர்ச் லைட்டின் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சியுள்ளனர்.
இதனால் காரில் பயணித்த இளைஞர்கள் நிலைகுலைந்த நிலையில் காரில் இருந்து இறங்கிய இளைஞர்கள் இப்படி வெளிச்சத்தினை கண்களில் பாய்ச்சி வாகனங்களை மறிக்க கூடாது என எடுத்துரைத்துள்ளனர்.
இதன்போது குறிக்கிட்ட காவல்துறையினர் இளைஞர்களை மிரட்டும் வகையில், அப்படித்தான் செய்வோம் என்ன செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதன்போது இளைஞர்கள் "பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவே இவ்வாறு வாகனங்களை டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சி மறிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்" என சுட்டிக்காட்டியுள்ளனர்.
காவல்துறை மா அதிபர்
இதன்போது காவல்துறையினர் அவரது அறிவிப்பு குறித்து எமக்கு தெரியாது என்று கூறிவிட்டு சிங்களத்தில் பேச ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் இளைஞர்கள், எமக்கு சிங்களம் தெரியாது, தமிழில் பேசுங்கள் என கூறிய வேளை, "இது சிறிலங்கா, நீங்கள் சிங்களம் பேசத்தான் வேண்டும், தமிழில் எல்லாம் பேச முடியாது" என மிரட்டியுள்ளனர்.
குறித்த காவல்துறையினர் மேல் அங்கியினை அணிந்திருந்த நிலையில் அவர்களது தகட்டு இலக்கம் மறைக்கப்பட்டு இருந்துள்ளது.
இந்தநிலையில், உங்களது தகட்டு இலக்கத்தை கூறுங்கள், நாங்கள் இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபாலிடம் முறையிடுகின்றோம் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
வழி மறித்த காவல்துறையினர்
இதன்போது காவல்துறை அதிகாரி "நீங்கள் அவரிடம் கூறி எதுவும் செய்யப் போவது இல்லை, அவராலும் எதுவும் செய்ய முடியாது. தகட்டு இலக்கமும் வழங்க முடியாது என மிரட்டி அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் வந்த வாகனங்களையும் காவல்துறையினர் டோர்ச் லைட் ஒளி பாய்ச்சியே வழி மறித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் காவல்துறையினரின் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு காணப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து செய்திகள் வெளியாகிய நிலையிலும் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை எனவே உரிய அதிகாரிகள் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது என பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - பு.கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா
