யாழில் துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞன் - கஜேந்திரகுமார் எம்.பி கண்டனம்
புதிய இணைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் சற்குணா தேவியின் மகனை தேர்தல் விதிமுறைகளை மீறி மருதங்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
தன்னுடைய உத்தியோகபூர்வ முகநூல் பதிவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள வடமராட்சி கிழக்குப் பகுதிக்கான @TnpfOrg அமைப்பின் அமைப்பாளராக ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி உள்ளார்.
வேட்புமனு நிராகரிப்பு
அவர் பருத்தித்துறை பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்பாளராகவும் இருந்தார், ஆனால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
சில நாட்களுக்கு முன்பு மருதங்கேணி காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அவர் செல்லவில்லை. சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு காவல்துறையினர் அவரது வீட்டிற்கு வந்து ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டனர்.
அவர் இனி வேட்பாளர் இல்லை என்று கூறியபோது, கலந்து கொள்ளச் சொன்னால் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி அவரைத் திட்டினர், மேலும் எந்த காரணமும் கூறாமல் அவரது உடல்நிலை சரியில்லாத மகனைக் கைது செய்தனர்.
வலுவான மற்றும் ஊழலற்ற அரசியல்
சற்குணாதேவியின் வலுவான மற்றும் ஊழலற்ற அரசியல் செயல்பாட்டிற்காக மதுதங்கேணி காவல்துறையினரால் பலமுறை துன்புறுத்தப்பட்டுள்ளார்.
அவரது கணவர், மகன் மற்றும் எங்கள் கட்சியின் பிற உறுப்பினர்களை காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்குகளில் குறிவைத்து, பின்னர் விடுவிக்கப்பட்டதாக தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழில் மனிதாபிமானற்ற முறையில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் காவல்துறையினரால் அழைத்துசெல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மருதங்கேணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்றினை காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
குறித்த சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி செல்லவில்லை.
காவல்துறையினர் சந்திப்பு
அதனை அடுத்து அவரது வீட்டுக்கு துப்பாக்கிகளுடன் சென்ற காவல்துறையினர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தும் ஏன் வரவில்லை என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையால் , தான் தற்போது வேட்பாளர் இல்லை எனும் காரணத்தால் சந்திப்பு வரவில்லை என காவல்துறையினருக்கு பதில் அளித்துள்ளார்.
காவல்துறையினர் அழைத்தால் காவல் நிலையம் வர வேண்டும் என அவரை அச்சுறுத்தி, தர்க்கப்பட்டுள்ளனர்.
வலைத்தளங்களில் வைரல்
அதனை அவதானித்த சற்குணாதேவியின் மகன், அம்மாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என காவல்துறையினரிடம் கோரிய போது , காவல்துறையினர் மகனுடன் முரண்பட்டுள்ளனர்.
பின்னர் மேலங்கி இல்லாது சாரத்துடன் குறித்த இளைஞனை கைது செய்து , சாரத்தில் பிடித்து இழுத்து சென்ற போது சாரம் அவிழந்தையும் கருத்தில் எடுக்காது மனிதாபிமானமின்றி இளைஞனை காவல் நிலையம் இழுத்து சென்றுள்ளனர்.
மேலங்கி இன்றி இளைஞனை வீதியில் சாரம் அவிழும் நிலையில் , சாரத்தை பிடித்து காவல்துறையினர் இழுத்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள நிலையில் பல தரப்பினரும் காவல்துறையினரின் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




