தெற்கு கடலில் பாரிய போதைப்பொருள் பறிமுதல்: காவல்துறை அதிகாரிக்கு திடீர் இடமாற்றம்
தெற்கு கடற்கரையில் கடலில் மிதந்து கொண்டிருந்தபோது வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் செய்ய வழிவகுத்த தகவல்களை வழங்கிய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ஹேமல் பிரசாந்த அந்தப்பதவியிலிருந்து திடீரென மாற்றப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எந்த ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை
காவல்துறை களப் படை தலைமையகத்தின் செயல் கட்டளை அதிகாரியாக அவர் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது 31 ஆண்டு கால பதவிக்காலத்தில் அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றிய அவரின் இந்த இடமாற்றத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. அவரது அதிகாரபூர்வ காலத்தில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கிட்டத்தட்ட இரண்டு தொன் போதைப்பொருட்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, மீன்பிடி படகு உரிமையாளர்கள்,மற்றும் பிற கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு திட்டங்களையும் ஹேமல் பிரசாந்த செயல்படுத்தினார்.
இதன் விளைவாக, தெற்கில் உள்ள படகு ஓட்டுநர்கள் பெரிய அளவில் போதைப்பொருட்களை தரைக்கு கொண்டு வருவதைத் தவிர்த்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஆழ்கடலில் பறிமுதல் செய்யப்பட்ட மேலும் பல படகுகளை கடற்படை விரைவில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவரது தகவலின் அடிப்படையில், கடற்படை ஒரு சோதனையை நடத்தி, தெற்கு கடற்கரையில் 51 பொதிகளில் மிதக்கும் 839 கிலோகிராம் போதைப்பொருட்களைக் கண்டுபிடித்தது. இந்த நடவடிக்கை காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் மூத்த காவல்துறை பொறுப்பதிகாரி ரன்மல் கொடிதுவக்கு ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
