சந்தேக நபர் உயிரிழப்பு- காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்களை விரட்டியடித்த காவல்துறையினர்!
பனாமுரே காவல் நிலையத்தில் சந்தேக நபர் உயிரிழந்ததையடுத்து காவல் நிலையத்திற்கு முன்பாக பதற்ற நிலை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் மனைவி அளித்த முறைப்பாட்டையடுத்து நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிரியவருகையில்,
எம்பிலிபிட்டி - பணாமுரே காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக குறித்த காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவல்துறை அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் மனைவி, தானும் தனது குழந்தையும் தாக்கப்பட்டதாக முறைப்பாடு அளித்த காரணத்தாலேயே நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 37 வயதான குறித்த சந்தேக நபர், காவல்நிலைய சிறைக்கூடத்தினுள் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார் என்றும் இதனையடுத்து அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நபர் உயிரிழந்ததையடுத்து, பணாமுரே காவல் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய பிரதேசவாசிகள், காவல்துறையினரால் தாக்கப்பட்டு குறித்த நபர் கொலைசெய்யப்பட்டதாகக்கூறி, காவல்துறையினருக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டு, கலகம் விளைவித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொலன்ன - எம்பிலிப்பிட்டிய வீதியின் போக்குவரத்து தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நபர் காவல்துறையினரால் தாக்கிக் கொலை செய்யப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினர். இந்தச் செயற்பாட்டைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முற்பகல் நாடாளுமன்றில் எழுந்து நின்று எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
இது சம்பந்தமாக நாடாளுமன்றில் விளக்கமளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்ததுடன் குறித்த இளைஞர் நேற்றிரவு 10 மணியளவிலே கைது செய்யப்பட்டதாகவும் தமது மேற்சட்டையை பயன்படுத்தி சுருக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் அவரை மீட்டபோதும் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார்.