கொழும்பில் தமிழர்களை அச்சுறுத்தும் காவல்துறையினர்: ஆவணங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு
கொழும்பில் வசிக்கும் தமிழர்களின் விபரங்களை கோரி வழங்கப்படும் விண்ணப்பங்கள் தமிழில் வழங்கப்படுவதில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்றச்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, காவல்துறையினர் வழங்கும் விண்ணப்பப் படிவத்தில் பெயர் விபரங்களுடன் சமயம் என்னவென்றும் கேட்கப்படுகிறது.
அப்படியென்றால் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கவா இதனை கேட்கிறீர்கள்? தமிழர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த செயற்பாடுகள் நடக்கிறது.
இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்
ரணிலின் காவல்துறை இராச்சியமா?அமைச்சர் டிரானின் காவல்துறை இராச்சியமா? அல்லது தேசபந்துவின் காவல்துறை இராச்சியமா இப்போது நடக்கிறதென நான் கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.
முன்னர் யுத்தம் இருப்பதால் இப்படிச் செய்தீர்கள் என்று கூறப்பட்டது. இப்போது யுத்தம் உள்ளதா? எனவே தனிப்பட்ட விபரங்களை கேட்பது எதற்காக ? எனவே தமிழர்களை இலக்கு வைத்து இப்படிச் செய்யவேண்டாம்.
எனது மக்கள் என்னிடம் கேள்வியெழுப்புகின்றனர். வெள்ளை வான் காலத்தில் கூட உயிர் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது செயற்பட்ட நாங்கள் இதற்கு பயப்படமாட்டோம். என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |