கொலை மிரட்டல் : காவல்துறை அதிகாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்
பாதாள உலக குழுவினரின் கொலை மிரடட்டல் காரணமாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க என்பவரே வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவராவார்.
விசாரணைகள் ஆரம்பம்
இதேவேளை வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற காவல்துறை பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க மற்றும் அவரது குடும்பத்தினரை இலக்கு வைத்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரி துமிந்த ஜயதிலக்க பெப்ரவரி 14 அன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் பிரான்சுக்குப் புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரை மிரட்டியதாகக் கூறப்படும் கும்பல்களில் கஞ்சிபானி இம்ரான் மற்றும் ஹீனாட்டியான மகேஷ் ஆகியோர் அடங்குவர்.
காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகம்
காவல்துறை அதிகாரி ஜயதிலக, குற்றவாளிகளிடமிருந்து தனக்கு வந்ததாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விமானத்தில் இருந்தே ஊடகங்களுக்கு பல அறிக்கைகளை வெளியிட்டார். அனைத்து சம்பவங்கள் குறித்தும் நியாயமான சந்தேகம் நிலவுவதாகவும், காவல்துறை அதிகாரி நன்மைகள் அல்லது அனுகூலங்களை பெற முயற்சித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிப்பதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
அடுருப்பு வீதி காவல் நிலையத்தில் இரண்டு சந்தேக நபர்களுக்கு விஷம் அருந்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த அதிகாரிக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கொலை மிரட்டல்கள் வந்ததாக
இந்த விசாரணையின் போது பலர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. சமீபகாலமாக பாதாள உலகக் குற்றவாளிகளிடமிருந்து தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அந்த அதிகாரி சிரேஷ்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என பேச்சாளர் கூறினார். எவ்வாறாயினும், அவ்வாறான அச்சுறுத்தல்கள் குறித்து அதிகாரி தெரிவித்தவுடன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் காவல்துறை அதிகாரி துமிந்த ஜயதிலக்கவிற்கு உத்தியோகபூர்வ துப்பாக்கி ஒன்றை வழங்கியதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை இருந்தபோதிலும், அவர் தனது மனைவி மற்றும் ஏழு வயது மகளின் பாதுகாப்பை உறுதிசெய்து ஒரு பாதுகாப்பான இடத்தில் பிரான்ஸ் செல்ல விரும்பினார்.
பணிக்குத் திரும்பவில்லை என்றால்
கடந்த வருடம் பல கொலைச் சந்தேக நபர்களை கைது செய்வதில் இன்ஸ்பெக்டர் ஜயதிலக முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) இருந்து 'ஹரக் கட்டா' தப்பிச் செல்ல முயன்றது குறித்து விசாரணை நடத்துவதில் இன்ஸ்பெக்டர் ஜெயதிலகவும் ஈடுபட்டார். விசாரணைகளின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த அதிகாரி பெப்ரவரி 14 முதல் மார்ச் 6 வரை விடுமுறையைப் பெற்றதாகவும், மார்ச் 6 ஆம் திகதிக்கு முன்னர் அவர் பணிக்குத் திரும்பவில்லை என்றால், அவர் தனது பதவியை காலி செய்ததாகக் கருதுவார்கள் என்றும் ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |