உயிரிழந்த முன்னாள் காவல்துறை மா அதிபருக்கு இறுதிச்சடங்கில் காவல்துறை மரியாதை
தன்னைத்தானே சுட்டு தற்கொலை செயது கொண்டதாக கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுமையான காவல்துறை மரியாதைகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற காவல்துறை மா அதிபர்களுக்குரிய காவல்துறை மரியாதைகளை முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிற்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
முழுமையான காவல்துறை மரியாதைகளுடன் இறுதிச் சடங்கு
அதன்படி, முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் 20ஆம் திகதி முழுமையான காவல்துறை மரியாதைகளுடன் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடல் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பு நாளை (19) முதல் வழங்கப்பட்டுள்ளது.
முடுக்கிவிடப்பட்ட விசாரணை
சி.டி.விக்ரமரத்ன, நாட்டின் 35வது காவல்துறை மா அதிபராக பணியாற்றியுள்ளார். இவர் நேற்று (17) காலை தனது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

இதற்கிடையில், மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவும், மலாபே காவல்துறையும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றன. மேலும், முன்னாள் காவல்துறை மா அதிபர் தன்னைத்தானே சுட்டுக் கொள்ளப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியை அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக அவரது மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 16 மணி நேரம் முன்