தபால் தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
புதிய இணைப்பு
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று (22) காலை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் காரணமாக மத்திய தபால் நிலையத்தைச் சுற்றி விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொதிகளை அனுப்பத் தயாராகும் ஊழியர்களின் கடமைகளுக்கு சில நபர்கள் இடையூறு விளைவித்ததால், கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு காவல்துறையினர் தற்போது அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) 5வது நாளாகவும் தொடரும் நிலையில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) முன்வைத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்க மறுப்பதாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், கைரேகையை கட்டாயமாக்குதல் மற்றும் மேலதிக நேரம் தொடர்பான தீர்மானம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தினார்.
பணிப்புறக்கணிப்பு
19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது.
பணிப்புறக்கணிப்பு காரணமாக, கடந்த சில நாட்களாக தபால் சேவைகளைப் பெறச் சென்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
