நாவலப்பிட்டியில் விருந்துபசார நிகழ்வில் காவல்துறையினர் சுற்றிவளைப்பு - 12 இளைஞர்கள் கைது
நாவலப்பிட்டி, சமனலகம, சுதுகல எல்லைக்கு அருகில் வாடகை அடிப்படையில் அறைகள் வழங்கப்படும் இடமொன்றில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வைச் சுற்றிவளைத்த நாவலப்பிட்டி காவல்துறையினர், 12 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றுதிரட்டி, நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நாவலப்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தத் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த இரண்டு அறைகளில் தங்கியிருந்த 12 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், கட்டுநாயக்க, தியசென்புர, நீர்கொழும்பு மற்றும் மெதிரிகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடமிருந்து 490 மில்லிகிராம் ஹஷீஸ், 140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 320 மில்லிகிராம் கொக்கெய்ன், ஹஷீஸ் சுருட்டுகள் மற்றும் வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |