முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபரின் காணியில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்
புத்தளம் – அட்டவில்லு பகுதியில் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் சிறுத்தை தோல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மற்றும் புத்தளம் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது, குருநாகல், ரிதிகல மற்றும் கருவலகஸ்வெவ பகுதிகளைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
09 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது
சோதனையின் போது, சுமார் 6 அடி நீளமுடைய பெரிய சிறுத்தையின் பதப்படுத்தப்பட்ட தோல், ஒரு புள்ளிமான் தோல் மற்றும் துப்பாக்கிக்கான 09 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற வேளை, காணியில் விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த காணியை முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபரிடமிருந்து குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தமை தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கையில், கைப்பற்றப்பட்ட சிறுத்தை தோலானது சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு பெரிய சிறுத்தையினுடையது எனவும், இத்தகைய விலங்குகள் பொதுவாக வில்பத்து தேசிய பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளிலேயே அதிகம் வாழ்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான காணியின் உரிமையாளரான முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபரை நேரில் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |