காவல்துறை துப்பாக்கிசூடு : ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை ரன்மினிதன்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி, நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சூதாட்ட நிலையம் ஒன்றை சோதனையிட
திஸ்ஸமஹாராம காவல்துறையினருக்கு நேற்று நள்ளிரவு 12.00க்கும் 1.00 மணிக்கும் இடையில் கிடைத்த தகவலின்படி, அப்பகுதியில் உள்ள சூதாட்ட நிலையம் ஒன்றை சோதனையிட மூவர் அடங்கிய காவல்துறை குழுவொன்று சென்றுள்ளது.
காவல்துறையினர் அங்கு சென்றதும் சூதாட்ட நிலையத்தில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்ய முயன்ற போது
பின்னர் அவர்களை கைது செய்ய முயன்ற போது காவல்துறை சார்ஜன்ட் ஒருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபருக்கும் இடையில் முறுகல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது துப்பாக்கி இயங்கியதில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |