பொலிஸாரின் சித்திரவதை உயிரிழப்புக்களை உடன் தடுக்கவும் - விடுக்கப்பட்ட கோரிக்கை
காவல்துறையின் சித்திரவதைகளினால் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று ஸ்ரீலங்கா காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையிடமும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கைது செய்யப்படும் நபர்கள், எந்தவொரு சமூக அந்தஸ்தை கொண்டிருந்தாலும், எந்தவொரு குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டாலும் அவர்களின் உயிர் பாதுகாக்கப்படுவதையும், அவர்களின் மனித உரிமைகள் மற்றும் பிற உரிமைகள் மீறப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்யும் பொறுப்பு பொலிஸ்மா அதிபருக்கு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு, காவல்துறை மாஅதிபருக்கு எழுதிய கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசியலமைப்பு மற்றும் பிற சட்டங்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை முழுமையாக உறுதிப்படுத்துவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா, காவல்துறை மாஅதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்கள் குறித்து நீண்ட வரலாறு இருந்தாலும், அது இப்போது ஒரு போக்காக மாறியுள்ளதாக வலியுறுத்தியுள்ளார். தாரக தர்மகீர்த்தி விஜசேகர மற்றும் தினெத் மெலன் மாம்புலா ஆகியோர் ஆயுதங்களைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டவிரோதமாக கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று பேரின் உயிரிழப்புகள் குறித்து, காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது ஸ்ரீலங்கா காவல்துறை தலைவராக, காவல்துறைமா அதிபரின் சட்டரீதியான கடமை என்பதை சட்டத்தரணி சேனக பெரேர சி.டி விக்ரமரத்னவுக்கு நினைவுபடுத்தியுள்ளார். காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை தொடர்ந்து குறைந்து வரும் பட்சத்தில், சமூகத்தில் பிரஜைகள், தமது பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்ளும் தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற மரணங்கள் நிகழும்போது, இடைநீக்கத்திற்கு அப்பால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் சட்டத்தரணி சேனக பெரேரா குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலைமைய, இதுபோன்ற சித்திரவதைகளை மேற்கொள்வதற்கு, காவல்துறைக்கு கூடுதல் தைரியம் கிடைப்பதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறைியில் தொடரும் சித்திரவதைகளைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துவதாக கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
காவல்துறைமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டின், பிரதி சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனை தொடர்பான ஐ.நா விசேட பிரதிநிதிதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.