கோட்டாவின் சர்வாதிகாரம் - மக்கள் விரட்டியடித்த கதை : ரணில் மறந்து விடக்கூடாது!
"அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் கிடையாது, அவருக்கு தேர்தல் தொடர்பிலும், மக்களின் நலன்கள் தொடர்பிலும் எவ்வித அக்கறையும் இல்லை.
சுயவிருப்பத்தின் பெயரில் சர்வாதிகாரியாக செயல்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாவின் நிலை என்ன ஆனது என ரணில் நினைவுபடுத்தி பார்க்கவேண்டும்"
இவ்வாறு, மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொய்யான கருத்தை வெளியிடும் ரணில்
தொடர்ந்து அவர்,
"அரசியல் அமைப்பிற்கு எதிரான அதிபர் ரணிலின் செயல்பாடுகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலடி கொடுப்போம்.
மக்களின் ஜனநாயக உரிமையை பறித்து அரசியல் அமைப்பிற்கு முரணாக செயல்படுவதன் விளைவை ரணில் விரைவில் விளங்கிக்கொள்ளுவார்.
அரசியலமைப்பிற்கு முரணாக செயல்பட்ட முன்னாள் அதிபர் மைத்திரி மற்றும் கோட்டாபயவிற்கு நடந்த சம்பவங்களை அவர் திரும்பிப் பார்க்கவேண்டும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பொய்யான கருத்துக்களையே அதிபர் ரணில் நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை, தேர்தலுக்கு நிதி இல்லை என ரணில் கூறினார், அப்படியாயின் எதற்காக ஐக்கிய தேசிய கட்சி வேட்பு மனுத்தாக்கல் செய்யவேண்டும், தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
ரணில் பொறுப்புக்கூற வேண்டும்
இல்லாத தேர்தலுக்கு அனைத்து தரப்பினரையும் தயார்படுத்தியமைக்கு அவர் பொறுப்புக் கூறவேண்டும்.
வரவு செலவு திட்டத்தின் ஊடாக தேர்தலுக்கு ஒதுக்கிய நிதி எங்கே. உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பவற்றின் தோல்வி உறுதி, அதேசமயம் அதிபர் ரணில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவரும் கிடையாது, மக்களின் நலன்கள் தொடர்பில் அவருக்கு எதுவித அக்கறையும் கிடையாது.
இதுபோன்று சர்வாதிகாரமாக செயற்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாவின் நிலை என்ன ஆனது என அதிபர் ரணிலும் தெரிந்துகொள்ள வேண்டும்.
தேர்தலை பிற்போட்டாலும் மக்களின் ஆணையை அவரால் எப்போதும் வெல்ல முடியாது, அடுத்ததடவை தேசியப்பட்டியல் கூட கிடைக்காமல் போகலாம்." இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
