மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க அரசிடம் வளங்கள் இல்லையெனில் சொல்லுங்கள் நாங்கள் உதவி செய்கிறோம்!
"கடுமையான மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திடம் வளங்கள் இல்லையென்றால் எங்களிடம் சொல்லுங்கள், நாங்கள் உதவி செய்கிறோம்."
இவ்வாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாரிய மருந்துப் பற்றாக்குறை

தொடர்ந்து அவர்,
"இன்று நமது நாட்டின் மருத்துவமனை கட்டமைப்பில் புற்றுநோய், இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்ப் பிரச்சினைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் இல்லை.
உயிர்காக்கும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கு தற்போது பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அதிபர் பிரதமராக செயற்பட்ட போது இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஐக்கிய மக்கள் சக்தியால் செயல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் ஊடாக உதவி கோரப்பட்டது.
இந்த பற்றாக்குறை தற்போது தீவிரமாக நிலவுவதுடன், இதன் காரணமாக முக்கியமான பல சத்திர சிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளது.
நோய் தடுப்பு துறையில், குடும்ப சுகாதார சேவை பிரிவு மட்டத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா மற்றும் விட்டமின்களுக்கும் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.
நாங்கள் உதவி செய்கிறோம்

ஏதேனும் மருந்து, உபகரணங்கள் தட்டுப்பாடு நிலவுவதாக இருந்தால்,குறித்த பெயர் பட்டியலை எதிர்க்கட்சியிடமும் சமர்ப்பியுங்கள்.
தேர்தல் காலத்தில் மூச்சு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சட்டவிரோதமானது என்றாலும், தேர்தலின் பின்னர் மூச்சுத் திட்டத்தின் கீழ் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்திக்க ஒத்துழைப்போம்." இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.