போரை நிறைவுக்கு கொண்டு வந்தது மகிந்த ராஜபக்ச - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ புகழாரம்
போரை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீது பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படக்கூடாதென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மிகிந்தலையில் இடம்பெற்ற கட்சி கூட்டமொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டங்களின் போது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகளவான சொத்துக்களை சேகரிப்பதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மகிந்த மீதான குற்றச்சாட்டு
அத்துடன், மகிந்த ராஜபக்ச விலையுயர்ந்த லம்போகினி மகிழுந்து மற்றும் தங்க குதிரைகளை வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
அப்படியானால், குறித்த வாகனங்களும், தங்க குதிரைகளும் எங்கே எனவும் அவர் அதிகளவில் சேமித்ததாக கூறப்படும் சொத்துக்களும் எங்கே என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சாட்டியவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுக்களை ஆதரங்களுடன் நிரூபிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்
இலங்கையில் தேர்தலொன்று நடத்தப்பட்டால் அதில் தனிநபராக அதிக வாக்குகளை பெற்று வெற்றியீட்ட மகிந்த ராஜபக்சவால் முடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் இருக்கும் ஒருவரின் நற்பெயரை அவமதிப்பதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமது கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச யாருடைய கைப்பொம்மையாக செயல்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் ஒருவர் கட்டாயம் வெற்றி பெறுவார் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
