மண்ணுக்குள் புதைந்த மலையகம்...! திடீரென காணாமல் போன அரசியல் தலைமைகள்
நாடே வெள்ளத்தில் தத்தளித்து படுமோசமான ஒரு வலியும் நிர்கதியான சூழலையும் மக்கள் எதிர் நோக்கியுள்ளனர்.
இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்க வேண்டிய அரசியல் தலைமைகள், வெள்ளத்தில் மக்களை தத்தளிக்க விட்டுவிட்டு அவர்களின் அரசியல் பெருங்கடலில் நீச்சல் அடித்து கொண்டிருக்கின்றனர்.
வாக்களித்த மக்களுக்கு உதவி கரம் நீட்டாமல் “ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற கதையாய் நாட்டை எங்களிடம் கொடுங்கள் என கையேந்திகொண்டிருக்கும் காரியவாதிகளை அரசியல் தலைமைகளாக நாம் பெற்றுள்ளோம் என்பதை நினைக்கையில் வெட்கமாக உள்ளது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
இதிலும் முக்கியமாக தினம் தினம் சாதாரண மழையிலேயே மண்ணுக்குள் புதையுண்டு தப்பி பிழைத்து உயிர் வாழும் மலையக மக்கள் இந்த அனர்த்தத்தில் படும் பாடுகளை வாத்தைகளால் எடுத்து சொல்ல முடியாது.
இருப்பினும், இந்த வேதனைகளையும் மக்களின் அவசர நிலைமைகளையும் ஓடோடி வாக்களித்த நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒலிபெருக்கி வைத்து அறிவித்தல் விடுத்துதான் தெரிவிக்க வேண்டும் போல.
காரணம், ஒரு இடத்திலும் யாரையும் கண்டதாக எந்த தகவலும் இல்லை ஆனால் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தனது திருமண விழாவில் பெரும் பிஸியாக இருந்ததை சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.
வடக்கு கிழக்கில் என்ன விமர்சனங்கள் அரசியல் தலைமைகள் மீது முன்வைக்கப்பட்டாலும் தன் மக்களுக்கு என்ற உடன் களத்தில் இறங்கும் அரசியல் தலைமைகளை அந்த சமூகம் கொண்டுள்ளது.
ஆனால் நம் மலையக சமூகம், கட்சி கூட்டங்களுக்கு எங்களை பேருந்து பேருந்துகளாய் ஏற்றி சென்று எதிர் கட்சிகளுக்கு அரசியல் பலத்தை காட்டி சுய இலாபம் ஈட்டும் அரசியல் தலைமைகளைதான் கொண்டுள்ளது.
இதில் யாரை குறை சொல்வது இங்கு, குடும்ப அரசியலை நம்பி கொஞ்சமும் மாறாமல் வாழ்க்கையை கொண்டு செல்லும் மலையக மக்களையா ? அல்லது குட்ட குட்ட குனிவான் என்று ஆட்டி வைக்கும் அரசியல் தலைமைகளையா ?
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் மக்களுக்காக நின்றிருக்க வேண்டும் அல்லவா ? மக்களுடன் மக்களாய் பயணித்திருக்க வேண்டும் அல்லவா ?
இன்று வெளியில் இருந்து வந்த இந்திய இராணுவமும், ஏன் ஒரு வெளிநாட்டவரும் கூட மண்ணுக்குள் புதைந்த நம் மக்களை வலியுடன் வாரி எடுக்கும் போது, அந்த மக்களை அரவணைத்து தூக்க வேண்டிய மலையக தலைமைகள் எங்கு போனார்கள் ?
சத்தியாமாக தெரியவில்லை வாக்குகாக இல்லாமல் உடன் நிற்க வேண்டிய சூழலில் மக்களுடன் எப்போது நம் மலையக தலைமைகள் நிர்பார்கள் என்று ?
நினைவிருக்கின்றதா அன்று தொலைகாட்சி நிகழ்ச்சியில் புனைபெயர் வைத்து மாறி மாறி சண்டையிட்ட போது வந்த அளவில் கூட இன்று மக்களுக்கு நீங்கள் உதவி கரம் நீட்டியதாக செய்திகளை காண முடியவில்லை.
அன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறையில் அடைக்கப்பட்ட போது பொங்கி எழுந்து வந்து ஊடகம் ஊடகமாய் ஆதங்கம் வெளியிட்ட தலைமைகளுக்கு இன்று ஏன் எம் மக்கள் கொத்து கொத்தாக மண்ணுக்குள் அடைப்பட்டு புதையுண்டிருப்பதை எட்டி கூட பார்க்க தோணவில்லை ?
ஒட்டுமொத்தமாக நாட்டில் வந்த இந்த அனர்த்தம் பல அரசியல் தலைமைகளின் உண்மை முகங்களை திரையிட்டு காட்டியுள்ளது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
ஒரு கணம் சிந்தியுங்கள்...!
உடமைகளை இழந்து உறவுகளை இழந்து பரிதவிக்கும் போது நமக்காக இல்லாத பக்க பலம் நாளை வந்து கையில் பணத்தை நீட்டி என்ன பயன் ?
ஒரு தலைமை என்பவர் எப்படி பட்ட சூழ்நிலையிலும் தன்நலம் பாரா மக்கள் நலனுக்காக பயணிப்பவரே ஆனால் இங்கு முதலில் தன்னலம் என்பதே நம் தலைமைகளுக்கு மேலோங்கியுள்ளது.
இதன் பின்பு கூட என்ன நடக்கும் ? நாங்கள் உங்களுக்கு அதை செய்கின்றோம் இதை செய்கின்றோம் அவ்வாறும் இல்லை என்றால் முக்கியமாக ஒரு வார்த்தை இனி வரும் எல்லார் தலைமைகளிடத்திலிருந்தும் வரும் என்ன தெரியுமா ?
“மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் கட்சி கட்டாயம் வீடு பெற்று தரும், கொடுப்பனவு பெற்று தரும், உங்களுடன் நாங்கள் பயணிக்கின்றோம்” என்று தேன் பூசப்பட்ட வார்த்தைகள்.
நம் மக்களும் கிளிப்பிள்ளை போல அடடே என புதிதாக கேள்விப்பட்டது போல தலையாட்டுவோம்.
தலையாட்டி பொம்மையாய் இருக்கும் வரை நம்மை வைத்து விளையாடிக்கொண்டுதான் இருக்கும் இந்த அரசியல் களம் என்பதை உணர வேண்டி கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
ஒரு அனர்த்தம் வந்துதான் நமக்கு அரசியல் நாடகங்களை கற்பிக்க வேண்டி சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருப்பது மனதில் ஆதங்கத்தையும் அறியாமையையும் மிகவும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |