ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு : தொடரும் சர்ச்சை
கடந்த காலங்களில் ஆசிரியர் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் மற்றும் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பாமல் பாதுகாத்த நிலை காணப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இடமாற்றங்களில் உள்ளக இடமாற்றம், வருடாந்த இடமாற்றம் என பல வகைகளில் காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள், அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தனர்.
அந்த அடிப்படையில் வெளிமாவட்டங்களுக்கு செல்லாதவர்கள் ஒரு பகுதியினர் இருக்க, வெளிமாவட்ட சேவை செய்தவர்கள் வர முடியாத சூழல் இருக்க, பாதுகாக்கப்பட்டவர்களுக்கு வயது அதிகமாகி விட்டது என்று ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.
நெருக்கடியான காலங்களில் வெளி மாவட்டங்களில் சேவையாற்றியவர்களை மீண்டும் வெளியில் அனுப்புகின்ற நிலைமையை திட்டமிடாமல் உருவாக்கியதன் விளைவே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம்.
நாங்கள் இடமாற்றத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பதிலீடுகள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கான நலன்கள் பார்க்கப்பட வேண்டும். ஆனால் அது நேர்மையான விதத்தில் பாரபட்சமின்றி பழிவாங்கல்கள் இன்றி முறைகேடுகள் இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பதிலீட்டு இடமாற்றம் வழங்கப்படும் போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஆசிரியர்களை மாத்திரம் வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய தேவை இல்லை. ஏனைய மாவட்ட ஆசிரியர்களையும் அவர்களின் சூழ்நிலையறிந்து வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கலாம்.“ என தெரிவித்தார்.
இது போன்ற மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |