ரணிலின் பின்னடிப்பால் இந்தியா எடுத்துள்ள முடிவு
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அதிபர் ரணில் விக்ரமசிங்க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் எந்தெந்த தீர்மானங்களையும் எட்டாது முடிவுக்கு வந்த பின்னணியில், தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான அரசியல் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம்(ஓகஸ்ட் - 01) இந்திய தூதரகத்தின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்திப்புக்கான அழைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடாக இந்த சந்திப்புக்கான அழைப்பு ஏனைய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டதாக தெரிய வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் கட்சிகளின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், கலையரசன் ஆகியோரும் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், சு. நோகராதலிங்கம் புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இந்தச் சந்திப்புக்கான அழைப்பு அனுப்பப்பட்டதா? என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.