"கோட்டாபயவின் முட்டாள் பூனைகளுக்கு ஏற்பட்ட நிலை"
சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை புறக்கணித்ததன் மூலம் பதவி துறந்த கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த மனுவொன்று மீண்டும் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பழிவாங்கல்கள் ஆணைக்குழு
ஷானி அபேசேகர சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அஷேக தேவேந்திர இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையில் ஆணையாளர்களான தயா சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவானது நகைப்பிற்கிடமான ஒரு ஆணைக்குழுவாக மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டிருந்ததுடன், பிசு பூஷா என்ற சிங்கள கேலிச் சித்திர தொடருடன் ஒப்பிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.