தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு இதுவே வழி : அடித்துக்கூறும் அரசியல்வாதி
அனைத்து தமிழ் தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டுடன் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைவதனூடாகவே தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான சிறந்த பலனை எட்டமுடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்தரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம் (06.10.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கொண்டவாறு தெரிவித்த அவர், நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இருப்புக்காக எதையும் செய்ய தயங்காது எனத் தெரிவித்தார்.
சிறீரங்கேஸ்வரன் மேலும் கூறுகையில்,
தற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழலை உற்றுநோக்குகின்ற சனல் 4, திலீபனின் ஊர்திப் பவனி, குருந்தூர் மலை தீர்ப்பு தொடர்பான நீதிபதியின் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சமூகவலைத் தளங்களை கட்டப்படுத்தல் என காலத்துக்கு காலம் ஒவ்வொரு செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எம்மைப் பொறுத்தவரை இவ்வாறான பிரச்சினைகளுக்கு அடிப்படை தீர்வாக அரசியல் தீர்வையே நாம் வலியுறுத்துகின்றோம்.
அதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்து அரசியல் தீர்வை நோக்கி நகர வேண்டியவர்கள் என்பதை காண்பித்து நிற்கின்றது.
அதேபோல ஐ.நா சபை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் எல்லாம் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஓர் இணக்கத்துக்கு வரவேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றனர்.
அதனடிப்படையில் அனைத்து தமிழ் தரப்பினரும் ஓர் அணியாக ஒரே நிலைப்பாட்டில் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றன. ஆனால் துரதிர்ஸ்டம் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் கட்சிகளில் அவ்வாறான ஓர் இணக்கப்பாடான சூழல் இல்லை என்பதே கண்கூடாக உள்ளது.
இவ்வாறான சூழல் இருக்கும் பட்சத்தில் இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்” என்றார்.