புலி நீக்க அரசியல் என்பது ஈழத் தமிழரை ஒடுக்கவே…!
2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிந்தைய காலத்தில் புலி நீக்க அரசியல் போருக்கு ஈழத் தமிழ் சமூகம் முகம் கொடுத்து வருகிறது.
கடந்த காலத்தில் புலிகளை அழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு, ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது அரசு.
அதேபோல முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய காலத்தில் புலிகளை பற்றி நினைவுகளை ஒடுக்கும் நீக்கும் போர் என்ற பெயரில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதுடன் விடுதலைப் போராட்டம் சார்ந்த தடயங்களை அழிப்பதும் புலிகள் என்ற விம்பம் தமிழர்களின் அடையாளமாய் இருப்பதை துடைத்தழிப்பதுமான முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் இடம்பெற்று வருகின்றது.
அதனொரு பகுதியாய் யாழ். பல்கலைக்கழகத்திலும் புலி நீக்க அரசியல் முயற்சி ஒன்று இடம்பெற்ற போதும் பல்கலைக்கழக மாணவர்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.
விடுதலைப் போராட்டம்
கொழும்பைச் சேர்ந்த பெண் தமிழ் சட்டத்தரணி ஒருவர் புலிகள் பாசிசவாதிகள் என்று கொழும்பில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியிருந்தமை சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பை உள்ளாகியிருந்தது.
சிங்கள மக்கள் மத்தியில் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சார்ந்த நியாயங்களை நாம் எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றோம்.
விடுதலைப் புலிகளின் காலம், இன்றைய நாட்களில் நமக்கு பெரும் பாடங்களை புகட்டிக்கொண்டிருக்கிறது. சிங்கள மக்கள்கூட அதனை உணரத் தொடங்கியுள்ளனர்.
அண்மையில் எனது சிங்கள மொழியாக்க நூல்வெளியீடு கொழும்பில் நடந்த போது அங்கு தலைவர் பிரபாகரன் குறித்தும் போராளிகள் குறித்தும் பேசிய வேளை சிங்கள மக்கள் அதனை ஏற்று உணர்ந்து கரங்களைப் பற்றிக்கொண்டார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் என்பவர்கள் எமக்கு வேறானவர்களில்லை என்பதையும், அவர்கள் எம் வீடுகள் தோறும் இருந்து எமது விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் தாய்நிலத்திற்குமாக உருவாகிய போராளிகள் என்பதும், சிங்கள மக்களுக்கு புலிகள் எதிரானவர்களல்ல என்பதை எமது தலைவர் அழுத்தமாக எடுத்துரைத்திருப்பதையும் கூறியமை அப் பேச்சின் சாரம்.
உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளுகிற காலம் ஒன்று வரவேண்டும். அப்படியான ஒரு சூழ்நிலைதான் ஈழத் தமிழ் மக்களின் விடுதலை தாகம் குறித்து சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளுகிறதாகவும் இருக்கும்.
பெண் சட்டத்தரணிக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் குறித்த பெண் சட்டத்தரணி யாழ். பல்கலைக்கழத்திற்குள் ஒரு நிகழ்வில் பேச அழைக்கப்பட்டிருந்தார். எமது விடுதலைப் போராளிகளை பாசிசவாதிகள் என்று அழைத்தமைக்காக பெரும் கொந்தளிப்புடன் இருந்த தேசத்தில் அவர் பேச அழைக்கப்படுவதற்கு நிச்சயமாக எதிர்ப்பு எழுந்தே தீரும்.
இந்த நிலையில் குறித்த சட்டத்தரணியின் பேச்சுக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அவரது பேச்சு இடம்பெறவில்லை.
ஒடுக்கப்படுகிற ஒரு இனம், இப்படியான புறக்கணிப்புக்களையும் எதிர்ப்புக்களையும் தான் தமது போராட்டமாக மேற்கொள்ள இயலும். அதுவே இங்கும் நிகழ்ந்திருந்தது.
தவிரவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான களமாக பங்களிப்பை வழங்கியிருக்கிறது. அத்துடன் ஈழத் தமிழ் சமூகம் தொடர்ந்து எதிர்கொள்ளும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக யாழ். பல்கலைக்கழகம் குரல் கொடுத்தும் வருகின்றது.
ஜனநாயக முறையில் யாழ். பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் போராட்டங்களும் வெளிப்படுத்தும் குரல்களும் மிக முக்கியமானவை.
அத்துடன் ஒரு இனம் ஒடுக்குமுறையால் பல்வேறு அவலங்களை எதிர்கொள்ளுகின்ற போது அதற்கு எதிராக போராடுவதும் குரல் கொடுப்பதும் ஒரு அறிவுச் சமூகத்தின் கடமையாகும்.
ஆசிரியர் சங்கத்தின் அரசியல்
கடந்த காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் இன ஒடுக்குமுறை சார்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். மாணவத் தலைவர்கள் இனக்கொலைக்கும் தாக்குதல்களும் ஒடுக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்துள்ளார்கள்.
அத்துடன் பல ஆசிரியர்களும் மாணவர்களுடன் கொலை மிரட்டல்களுக்கு முகம் கொடுத்திருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் கடத்தப்பட்டு பெரும் சித்திரவதைகள் செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக சமூகமும் கூட மௌனமான ஒரு இனவழிப்புப் போரை முகம் கொடுத்தது வரலாறு.
இந்த நிலையில் குறித்த சட்டத்தரணியை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்து அவரை பேச வைக்க ஒரு சில ஆசிரியர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.
அண்மையில் அவர்கள் போராளிகளை பாசிசவாதிகள் என்று பேசிய பேச்சை யாழ். பல்கலைக்கழகத்திலும் பேச வைப்பதற்கான முயற்சியாகத்தான் இது நடந்தது.
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது பல்வேறு அவதூறுகளை மேற்கொண்டு சர்வதேச அளவில் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படக்கூடிய சிலர் யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகியமை இந்த அரசியலை முன்னெடுப்பதற்காகவே என்றும் அதற்காகவே ஆசிரியர் சங்கத்திற்குள் நுழைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு இனத்திற்கும் அதன் ஒப்பற்ற விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராக இவ்வாறு செயற்படுவது நியாயமற்றது. பெரும் அநீதிக்குத் துணைபோவதுமாகும்.
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் எதிர்ப்பு
இந்த நிலையில் ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றின் வாயிலாக குறித்த சட்டத்தரணியின் பேச்சு நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை மீண்டும் அழைத்து பேச வைக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு ‘அறிவுரை’ கூறியிருந்தது.
மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பது என்ற போர்வையில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதை தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
இந்த நிலையில் ஒரு சில ஆசிரியர்கள் அறிக்கை வாயிலாக மாணவர்களுக்கு எடுத்த ‘வகுப்பிற்கு’ மாணவர்கள் தமக்கு தெரிந்த வழிமுறையில் தமக்கு தெரிந்த மொழியில் போராட்டம் வாயிலாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
குறித்த அறிக்கையை மீளப் பெற வேண்டும் என்பதை மாணவர்கள் வலியுறுத்தினர். இதனால் ஆசிரியர் சங்கம் பின்வாங்கியது. தமது அறிக்கை மீளப்பெற்றது.
அத்துடன் குறித்த சட்டத்தரணி வெளியிட்ட போராளிகள் பாசிசவாதிகள் என்ற கருத்தை தாம் ஏற்கவில்லை என்றும் அறிவித்தது.
சில நேரங்களில் சில சூழல்களில் ஆசிரியர்களுக்கு மாணவர்களும் ‘பாடம்’ புகட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மாணவர்களின் மனநிலைக்கு எதிராகவும் தமிழ் இனத்தின் சூழ்நிலைகளுக்கு எதிராகவும் செயற்பட்ட இவ் ஒரு சில ஆசிரியர்கள் தமக்கு முன்னால் கடமையாற்றிய, கடமையாற்றி வரும் மூத்த ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் பாடங்களை கற்று செயற்பட வேண்டும்.
அனைவருக்குமான பாடம்
எங்கள் போராளிகள் இந்த மண்ணில் நடாத்திய போராட்டம் தான் நாம் இன்றைக்கு ஓரளவு அடையாளத்துடன் வாழ்வதற்கான வெளியை தந்திருக்கிறது. அவர்கள் தான் எமக்கு அடையாளமும் குரலும் முகமுமாக இருக்கிறார்கள்.
தமிழ் சூழலில் எம் போராளிகளை பாசிசவாதிகள் என்று கூறி அரசுக்கு ஒத்தோடிகளாக செயற்பட முனைகிற அனைவரும் இதில் பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
சட்டத்தரணி சுவஸ்திகா விவகாரம்: யாழ்.பல்கலையில் ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக திரண்ட மாணவர்கள் (Video)
ஒட்டுமொத்த ஈழத் தமிழ் சமூகமும் நேசிக்கின்ற போராளிகளை கொச்சைப்படுத்துகிற மனநிலையும் பேச்சும் ஒருபோதும் அறிவுநிலையாகாது. ஒருபோதும் ஆளுமையாகாது. மாறாக இழிநிலையாகவும் அரசுக்கு ஒத்தோடும் அரசியலாகவுமே கருதப்படும்.
இது தமிழ் சமூகத்தின் கூட்டுமனநிலை என்பதை இவர்கள் உணர வேண்டும்.
தமிழ் சமூகத்தின் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒப்பற்ற தியாகத்தினால் இயல்பாக உருவானது இந்த கூட்டு மனநிலை.
மக்களை புரிந்துகொள்ள எந்த அறிவும் ஒருபோதும் பயன்தராது. மக்களுக்கு எதிராக சிந்திக்கும் எந்த அறிவும் ஒருபோதும் நன்மை விளைவிக்காது.
ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த சமூகமாக நாம் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும்.
இன்றும் பல்வேறு ஆக்கிரமிப்புக்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களை வீழ்த்துவதை அறிவென செய்வது பேரநீதியாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 13 November, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.