கனடாவில் மீண்டும் நடைபெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்வு
கனடியத் (Canada) தமிழ்ச் சமூகமும் தமிழ் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் பொங்குதமிழ் நிகழ்வு கனடாவின் ஸ்காபரோ முற்றவெளியில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழத்தின் தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து 1976 இல் மேற்கொண்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலக்கோட்பாடுகள் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பனவே என்பதை வரலாறு தெரிந்தோர் அனைவரும் அறிவர்.
ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கை
1977இல் நடைபெற்ற தேர்தலில் வட- கிழக்குத் தமிழ் மக்களும் இக்கோட்பாடுகளுக்குப் பெரும் ஆதரவு வழங்கியிருக்கின்றனர்.
1977இற்குப் பின்னர் வலிமையுற்ற விடுதலைப் போராட்டத்தின் இலக்கும் ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கையும் ஒன்றே என்பதை மீண்டும் உலகுக்கு உணர்த்தும் நோக்கில் 2001இல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் பேரெழுச்சியோடு நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வு உலகுக்குப் பல செய்திகளைக் கூறியது.
ஆயுதப்போராட்டம்
2009இல் நடைபெற்ற பெரும் இனவழிப்புக்குப் பின் எமது போராட்ட வடிவம் மாற்றமடைந்தது. அச்சுறுத்தல் மிக்க தாயகச் சூழலில் இனப்பற்றாளர்கள், பொங்குதமிழின் மென்வடிவமாக ‘எழுக தமிழ்’ நிகழ்வை நடத்துகின்றனர்.
முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டதேயன்றி, தாயகம், தேசியம், தன்னாட்சி என்கின்ற கோட்பாடுகள் அழிவுறவில்லை.
இவை இனப்பற்றாளர்களிடையே தீப்பொறியென அகத்துள் சுடர் கொண்டிருக்கின்றன. தமிழர் திரண்டு எழுச்சி கொண்டாலே இச்சுடர் பிழம்பாகும்.
இப்பொங்குதமிழ் நிகழ்வைத் தங்குதடையின்றி முன்னெடுக்கவல்லோர் பாதுகாப்பு மிக்க அச்சுறுத்தலற்ற சூழலில் வாழும் புலம்பெயர்ந்தோரே என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
கனடியத் தமிழ்ச் சமூகம்
தாயகத்தில் அரசியல் சூழல் தளர்வுற்றிருக்கும் இவ்வேளை மீண்டும் எழுச்சியோடு, நமக்கான இலட்சியக் கோட்பாடுகளை முன்னெடுப்பதற்கான மிகப் பொருத்தமான தருணம் இதுவென நன்குணர்ந்த கனடியத் தமிழ்ச் சமூகமும் தமிழ் மாணவர் சமூகமும் பொங்குதமிழ் நிகழ்வை நடத்துவது எனப் பல அமைப்புகளோடு கலந்துபேசி முடிவெடுத்தன.
குறிப்பாகத் தமிழ் இளையோர் பெருந்துடிப்போடும் எதிர்பார்ப்போடும் பொங்குதமிழ் தொடர்பில் முனைப்போடு செயலாற்றி வருகின்றனர்.
23 ஆண்டுகளுக்கு முன்பு பேரெழுச்சியொடு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் மீளுருப்பெற்ற ‘பொங்குதமிழ் நிகழ்வுப் பிரகடனம்’ என அழைக்கப்படும் இக்கோட்பாடுகள் எவையும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக இன அழிப்பும் நிலப்பறிப்பும் தொடர்கின்றன.
எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை காலந்தோறும் அவற்றை ஓங்கி ஒலிக்கவேண்டியது புலம்பெயர்ந்தோரின் தலையாய பணி என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
இந்தப் பொங்குதமிழ் நிகழ்வானது பின்வரும் விடயங்களை வலியுறுத்துகிறது.
- தமிழின அழிப்புக்கான பன்னாட்டு விசாரணையை வற்புறுத்தியும்
- வடக்கு - கிழக்கு இணைந்த தமிழரின் மரபுவழித் தாயகத்தை அங்கீகரிக்கக் கோரியும்
- தமிழரின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும்
- சுதந்திரத் தமிழீழத் தனியரசை அங்கீகரிக்க வேண்டியும்
- தமிழின அழிப்புக்கான பன்னாட்டு விசாரணையை வற்புறுத்தியும்
- வடக்கு - கிழக்கு இணைந்த தமிழரின் மரபுவழித் தாயகத்தை அங்கீகரிக்கக் கோரியும்
- தமிழரின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும்
- சுதந்திரத் தமிழீழத் தனியரசை அங்கீகரிக்க வேண்டியும்
கனடா உள்ளிட்ட அனைத்துலகத்திடம் உரிமையோடும் பொறுப்போடும் மீண்டும் இவற்றை வலியுறுத்தும் நோக்கில், தமிழர் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்படும் பேரெழுச்சி மிக்க பொங்குதமிழ் நிகழ்வில் அனைவரையும் திரளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றாய் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒலிக்க, அனைத்துத் தமிழர்களும் எண்ணித்துணிந்து உணர்வால் உயர்ந்து பொங்கியெழுவோம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |