கொலை குற்றச்சாட்டுடன் தப்பிச் செல்ல முயன்ற சீன நாட்டவர்கள் இருவர் சிக்கினர்!
கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு சீன நாட்டவர்கள், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக நகரில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, எதிரிக் குழுவைச் சேர்ந்த ஒருவரை கடத்தி கொலை செய்ததாக இவர்கள் இருவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
34 மற்றும் 38 வயதுடைய இந்த சந்தேக நபர்கள் இன்று(23) வியாழக்கிழமை பிற்பகல் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் புறப்பாடு முனையத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இவர்கள் இருவரும் இந்தியாவின் மும்பை வழியாக சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா (AI-2275) விமானத்தில் ஏறுவதற்காக மாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அதன்போது, அவர்கள் சிங்கப்பூரைத் தங்களது இறுதி இலக்காகக் கொண்டு விமான பயணச்சீட்டுகளை வாங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயல்வது குறித்து கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் செயற்பட்ட விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், புறப்பாடு முனையத்தில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுக காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 10 மணி நேரம் முன்