இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு : திருப்பிவிடப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்
அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து நேற்று (06) இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்திகள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக குறித்த விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கரக்கடோவா எரிமலை நேற்று தீவிரமாகச் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சேவைகள்
இதன் காரணமாகத் தலைநகர் ஜகார்தாவின் சுகர்ணோ-ஹாட்டா சர்வதேச விமான நிலையம் உட்படப் பல விமான நிலையங்களின் சேவைகளை இந்தோனேசிய அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

எரிமலையிலிருந்து வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளுக்குப் பரவியுள்ள சிலிக்கா துகள்கள் அடங்கிய சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள், விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எரிமலைக்கு மேற்கே உள்ள வான்பரப்பு மற்றும் இலங்கைக்குத் தெற்கே உள்ள வான்வெளி உள்ளிட்ட விரிவான பகுதிகளினூடான விமானப் பயணங்களுக்கு இந்தோனேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையே சேவைகளை முன்னெடுக்கும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களின் பயணப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22