உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று
புதிய இணைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (25) இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது.
இன்றும் (25) ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திககளிலும் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்கள், காவல்துறை, முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (24) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.
அத்துடன் நாளைய தினமும் (25) எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், காவல்துறை திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு நாட்களுக்குப் பிறகு எந்த நீட்டிப்புகளும் வழங்கப்படாது என்று ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளதுடன் தபால் வாக்களிப்புக்கான காலக்கெடு இறுதியானது என்பதை தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) மீண்டும் உறுதிப்படுத்தினார்.
தபால் மூல வாக்களிப்பு
இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தபால் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 6,48,490 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மேலும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் அரச நிறுவனங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம், புனித தந்ததாது கண்காட்சி இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்காகக் கண்டியில் விசேட வாக்களிப்பு நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 06ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
