பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள்
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
மூடப்பட்ட தபால் நிலையங்கள்
மத்திய தபால் பரிமாற்றத்தில் தொடங்கிய இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று (17) நள்ளிரவு 12.00 மணி முதல் நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான தபால் நிலையங்கள் மற்றும் கிளை தபால் நிலையங்கள் நேற்று மாலை முதல் மூடப்பட்டதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் தபாலக தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக இன்று (18) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
சிரமங்களை எதிர்கொண்டனர்
அத்துடன் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள் ஊழியர்கள் ஆதரவளித்தமையினால் தபால் அலுவலக சேவைகள் யாவும் முடங்கியுள்ளன.
இவ் வேலைநிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்கக் கூடியதாக இருந்ததுடன் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
