அஞ்சல் ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு விவகாரம் : விசாரணைகள் தீவிரம்
அஞ்சல் ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு மோசடி குறித்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மோசடி தொடர்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஞ்சல் ஊழியர்களின் ஒரு குழுவினர் முறையற்ற விதத்தில் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையை மேலதிக நேர கொடுப்பனவாகப் பெற்றுக்கொண்டதாக சிவில் சமூக அமைப்பு ஒன்றினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தணிக்கை விசாரணைகளின் மூலம்
குறித்த முறைப்பாட்டை பரிசீலித்த பின்னர், அது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் கே.ஜி. லனெரோல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில் அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமாரவினால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை விசாரணைகளின் மூலம் இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், முறையான விரல் அடையாளப் பதிவு இன்றி பெருமளவிலான ஊழியர்கள் மேலதிக நேரக் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
விரல் அடையாள இயந்திரங்கள்
வாகனப் பராமரிப்பு போன்ற பணிகளின் போது, தேவையற்ற ஊழியர்களின் பெயர்களைப் பட்டியலில் இணைத்தும், வேலை நேரத்தை செயற்கையாக அதிகரித்தும் நிதி கோரப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அஞ்சல் ஊழியர்களின் வருகையை உறுதிப்படுத்த விரல் அடையாள இயந்திரங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சித்த நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
எனினும், அரச நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வருகைப்பதிவு மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு முறைகளில் வெளிப்படைத் தன்மையை பேண வேண்டியது அவசியம் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 7 மணி நேரம் முன்