சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு
நாட்டில் 72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் தொழில் சார் உரிமை கோரி முன்னெடுக்கப்பட இருந்த தொழிற்சங்க நடவடிக்கை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (10) முதல் மாகாண, வைத்தியசாலை மட்டத்தில் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கங்களின் கூட்டிணைவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தால் வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதை அடுத்து 72 சுகாதாரத் தொழிற்சங்கங்களும் தமக்கான தொழில் சார் உரிமைகளைப் பெற்றுத் தருமாறுக் கோரிக்கை விடுத்து பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
நிதி அமைச்சு
இந்நிலையில், கடந்த 6ஆம் திகதி சுகாதாரத் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சுகாதாரத் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்க இருந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நிதி அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூட உள்ளதுடன் சுகாதார ஊழியர்களின் தொழில் சார் உரிமை குறித்து தீர்க்கமான தீர்மானம் எட்டப்பட உள்ளது.
ஆகையால் நாடளாவிய ரீதியில் இன்று முதல் மாகாண மட்டத்திலும் வைத்தியசாலை மட்டத்திலும் தொழில் சார் உரிமை குறித்து சுகாதார ஊழியர்களை தெளிவூட்டுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை
சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண சுகாதார அமைச்சும் நிதியமைச்சும் அர்ப்பணிப்போடு செயற்படும் என நம்பிக்கையுள்ளது.
சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதில் கால தாமதம் அல்லது குளறுபடிகள் ஏதும் ஏற்படுத்த முயலும் பட்சத்தில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |