வறுமையை நோக்கி நகரும் நாடு: பதில் தெரிவிக்க முடியாத நிலையில் அரசாங்கம்
நாடு வறுமையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. பல பிரச்சினைகள் நாட்டில் காணப்படுகின்ற நிலையில் இம்முறை வரவு செலவு திட்டத்தில் இவற்றிற்கு என்ன தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அரசாங்கத்தினால் பதில் தெரிவிக்க முடியாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசாங்கத்தின் தவறான கொள்கைத்திட்டங்கள் காரணமாக வெகு விரைவில் சமூக பிளவொன்று உருவாகப்பபோகின்றது எனவும் அதனை தடைகள் போட்டு நிறுத்த முடியாது எனவும் இந்த நாட்டில் அரச ஊழியர்கள் சுமையல்ல, ராஜபக்சவினரின் குடும்ப ஆட்சியே இந்த நாட்டில் சுமையாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
போராட்டங்கள் காரணமாக நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றும் என அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால் நாட்டில் எரிவாயு மற்றும் பால்மாவிற்காக வரிசை கூடுகின்றது, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்கின்றனர். இலட்சக்கணக்கான மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்போது மழைக்காலநிலை காரணமாக மின்சார நெருக்கடி வரப்போவதில்லை, ஆனால் அடுத்த ஆறு வாரங்களுக்கு மழை இல்லாது போகும் நிலையில் எரிபொருள் தட்டுப்படும், அடுத்ததாக மின்சார தட்டுப்பாடும் ஏற்படப்போகின்றது. இவை எதற்கும் வரவு செலவு திட்டத்தில் தீர்வு இல்லை.
மேலும் நாம் கடன்களை பெற்றதாக கூறுகின்றனர். நிதி அமைச்சர் மங்கள சமரவீர (Mangala Samaraweera) உள்ளிட்ட அதிகாரிகள் 2019 ஆம் ஆண்டில் 7.2 பில்லியன் டொலர்களை சேமித்து வைத்துவிட்டே சென்றனர். அது இல்லையென்றால் இப்போது நாடு வீழ்ச்சி கண்டிருக்கும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்து 18 மாதங்களில் 3,740 பில்லியன் டொலர் கடன்களை பெற்றுள்ளது. இந்த நிதிக்கு நடந்தது என்ன? இவற்றை மக்கள் மீது சுமத்தி மக்களை நெருக்கடிக்குள் தள்ளவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையென நிதி அமைச்சர் கூறியுள்ளார், ஏழு இலட்சம் புதிய அரச ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 80 வீதமான நியமனங்கள் ராஜபக்சவினரால் நியமிக்கப்பட்டதாகும் என தெரிவித்துள்ளார்.