கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் வரவுள்ள நடைமுறை
கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒன்றாரியோ மாகாணத்தில் கொவிட் உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரித்து வருவதால் புதிய நடைமுறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து பொது உட்புற கட்டமைப்புகளில் மக்கள் முகக் கவசங்களை அணிய ஆரம்பிக்க வேண்டும் என ஒன்றாரியோ மாகாண தலைமை மருத்துவ அதிகாரி கீரன் மூர் (Kieran Moore) தெரிவித்துள்ளார்.
முகக் கவசங்களை அணிதல்
சுவாச தொற்றுகள், காய்ச்சல், கொவிட் ஆகிய மூன்றின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்றைய தினம் இந்த பரிந்துரை வெளியாகியுள்ளது. ஆனாலும் அவர் முகக்கவச கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தவில்லை.
மாறாக, இந்த நோய்களில் இருந்து மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாப்பதற்கு தமது பங்கை செய்யும் பொறுப்பை தனிநபர்கள் மீது அவர் சுமத்துகிறார்.
சுகாதார முன்னெச்சரிக்கை
காய்ச்சல் தடுப்பூசிகளை பெறவும் ஏனைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக குழந்தைகள் மத்தியில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் ஒன்றாரியோ வாசிகளை வலியுறுத்துகிறார்.
உட்புற கட்டமைப்புகளில் முகக் கவசங்களை அணிவதுடன் ஏனைய பொது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடருமாறும் மத்திய சுகாதார அதிகாரிகள் கனடியர்களை கடந்த வாரம் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
