பிரஜா சக்தியால் போர்க்களமான வேலணை பிரதேச சபை : அமைதிகாத்த தவிசாளர்
வேலணையில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பிரதேச சபை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் கலந்து கொள்ளாமையால் கோரிப் பெறவேண்டிய பல விடயங்கள் கைநழுவிப் போய்விட்டதாக உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளாமைக்கு காரணம் தெரிவிக்குமாறும் அவர் மேலும் கோரியிருந்தார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் (21) நடைபெற்ற போதே இந்த விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்
இதற்கு பதிலளித்த தவிசாளர், “சர்வதேச மைதான அங்குரார்ப்பண நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகள் வேலணையில் நடைபெற்ற போதும் தனக்கு தவிசாளர் என்ற ரீதியில் அழைப்பு விடுக்கப்படாதிருந்ததாக குறிப்பிட்டார்.
குறிப்பாக தனது ஆளுகைக்குள் இருக்கும் இரு வீதிகளுக்கு அண்மையில் அபிவிருத்திக்கான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் தவிசாளருக்கோ அன்றி அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 3 உறுப்பினர்களுக்கோ அழைப்பு விடுக்காது ஆளும் கட்சியின் நேரடி முகவர்களான பிரஜா சக்தி உறுபினர்களைக் கொண்டு அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தனது தனிப்பட்ட முடிவாகவே அது இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சதீஸ்குமார் குறித்த வீதியானது மாவட்ட செயலகம் ஊடாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாகவும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அத்திட்டத்தை மேற்கொண்டதாகவும் அழைப்பு விடுக்காமைக்கு வீதி அதிகார சபையிடம் தான் கேட்கவேண்டுமே தவிர கட்சியை குற்றம் சாட்ட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
இந்தநிலையில் சபையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் பிரஜா சக்தி தெரிவு குறித்தும் அது ஏனையவர்களின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி தனி ஒரு கட்சியின் ஆதிக்கத்தை வலுவாக்குவதாகவும் சுட்டிக்காட்டி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக வேலணை பிரதேசத்தில் பிரதேச சபையின் ஆழுகைக்குள் இருக்கும் வீதிகளை பிரதேச சபையின் அனுமதி பெறாது மத்திய அரசு அபிவிருத்தி செய்கின்றது.
சபையில் அமைதியின்மை
பிரஜா சக்தி திட்டம் என்பது NPP என்ற போர்வைக்குள் இருக்கும் JVP தனது அரசியல் இருப்பு ஆட்டம் கண்டுவிடப்போகின்றது என்ற அச்சத்தின் வெளிப்பாடாக உருவாக்கிய ஒரு கட்டமைப்பு.
இது கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார உத்தியோகத்தர்களை மட்டுமல்லாது பிரதேச செயலர், மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், நகர பிதாக்கள், முதல்வர்கள் உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும் வலிமை கொண்டது.
இதனூடாகவே தெரிகின்றது இந்த அரசாங்கம் நேரடியாகவே கட்சி அரசியலை செய்கின்றதென்று. ஆட்சியை பிடிக்க தேர்தல் காலங்களில் தங்களால் கூறியவற்றை மக்களுக்கு செயற்படுத்திக் காட்டுவதில் தோல்விகண்ட தேசிய மக்கள் சக்தி, வறுமை ஒழிப்பு என்ற போர்வையில் பிரஜா சக்தி என்ற ஒரு திட்டத்தினை உருவாக்கி இருப்பை தக்கவைக்க முயல்கின்றது.

குறிப்பாக பிரஜா சக்தியில் தமது கட்சியின் நேரடி உறுப்பினர்களை அல்லது விசுவாசிகளை ஒவ்வொரு உள்ளூராட்சி மன்ற வட்டாரங்களிலும் நியமித்துள்ளார்கள்.
இதை விட கேவலம் ஊழலை ஒழிப்போம் ஊழல் வாதிகளுக்கு இடமளியோம் என்று கூறிய இந்த அரசாங்கம் பிரஜா சக்தி என்ற போர்வையில் நியமித்த உறுப்பினர்கள் பலர் ஊழல் வாதிகள் பெரும் நிதி மோசடி செய்து நிரூபிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருக்க தோற்றுப்போன தமது கட்சிசார் உறுப்பினர்களை அந்த பொறுப்புக்களுள் அதிகாரத்தைக் கொண்டு திணித்துள்ளார்கள். இதனால் அதிகாரிகள் பெரும் அதிருப்தியுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
எனவே அரசியலுக்காக கொண்டுவரப்பட்ட இந்த முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டி வலியுறுத்தப்பட்டது.
சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக குறித்த வாக்குவாதம் இடம்பெற்றதால் சபை பெரும் குழப்பநிலையை எட்டிய நிலையில் தவிசாளர் அமைதி காத்த நிலையில் பின்னர் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |