மற்றுமொருவர் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்
இராஜாங்க அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இவர் இரத்தினபுரி மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றமற்றவராகக் கருதி விடுதலை செய்யப்பட்டவராவார்.
மரண தண்டனை
2015 ஆம் ஆண்டில் இரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பு தொடர்பில் பிரதிவாதிகள் சார்பில் பிரதி மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான தீர்ப்பை இவ்வருடம் மார்ச் 31ஆம் திகதி அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை நிரபராதிகளாகக் கருதி விடுவிக்குமாறு உத்தரவிட்டது.
இவ்வாறான பின்னணியில் இவர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் 38ஆவது இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
