வெளிநாட்டுப் பயணத் தடைக்கு முன்னதாக வெளிநாடு பறந்தார் பிரேமலால்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை அமல்படுத்தச் சென்றபோது, அவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது.
குறித்த பயணத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னர், அதாவது கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதியே முன்னாள் பிரதி அமைச்சர் தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றின் உத்தரவு
பிரேமலால் ஜயசேகர உட்பட மூவருக்கு எதிராக இந்த வெளிநாட்டு பயணத் தடையை விதித்து, வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மரண தண்டனை
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கஹவத்த பிரதேசத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பேரணியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகர, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயசிங்க மற்றும் கஹவத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன டி சில்வா ஆகியோருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து மூவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்ததுடன், அந்த விடுவிப்புக்கு எதிராக, குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதிக்கப்பட்டவரின் மனைவி சாந்தா தொடங்கொட உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை குறித்த மேன்முறையீட்டை பரிசீலித்துக்கொண்டிருக்கும் வேளையில் எடுத்துள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |