தலைவர் பிரபாகரன் தொடர்பில் கண்ணீர் மல்கிய பிரேமலதா (படங்கள்)
மறைந்த தே.மு.தி.க தலைவரும், தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகருமான விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்ற ஈழத்து அரசியல்வாதிகளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிவாஜிலிங்கம் மற்றும் சென்னையில் வசித்துவரும் ஈழத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் ஆகியோரிடம் தலைவர் பிரபாகரன் தொடர்பில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கண்ணீர் மல்க நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தே.மு.தி.க தலமை அலுவலகத்தில் உள்ள மறைந்த விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் காலை 11 மணியளவில் ஈழத் தமிழர்களின் சார்பில் சரவணபவன், சிவாஜிலிங்கம் மற்றும் சண் மாஸ்டர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி
அங்கிருந்து சாலிகிராமத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க கட்சியின் பொதுச் செயலாளருமாகிய பிரேமலதா அவர்களுடைய இரண்டு புதல்வர்களுடன் ஈழத்தின் பிரமுகர்கள் தமது இரங்கல்களைப் பகிர்ந்துகொண்டதுடன் ஈழத் தமிழர்கள் சார்பில் தமது இரங்கலையும் தெரிவித்தனர் .
தலைவர் பிரபாகரன் மீது விஜயகாந்திற்கு இருந்த ஈடுபாடு
இதன்போது மறைந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தலைவர் பிரபாகரன் மீது தனது கணவர் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாகவே எங்கள் மகனுக்கு பிரபாகரன் எனப் பெயர் வைத்தார் எனக் கண்ணீர் மல்க உணர்ச்சிப்பெருக்கோடு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து தம்மைத் தாமே ஆளுகின்ற மக்களாக வாழ வேண்டும் என்பதில் தனது கணவர் உறுதியாக இருந்தார் எனக் கூறினார்.
விஜயகாந்தின் எண்ணம், நோக்கம், சிந்தனை
இதன்போது விஜயகாந்தின் எண்ணம், நோக்கம், சிந்தனை ஆகியவற்றை நாங்கள் என்றும் மதிப்பதுடன் ஈழத் தமிழர்களின் நலனுக்காக அவர் விட்டுச் சென்ற பணியை நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும் என சரவணபவன், சிவாஜிலிங்கம் சண் மாஸ்டர் உள்ளிட்ட பிரதிநிதிகள் அவரிடம் கேட்டுக்கொண்டனர்.
இச்சந்திப்புக்கான ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடிகளில் ஒருவரான காமாட்சி நாயுடு அவர்கள் மேற்கொண்டிருந்ததுடன் அவரும் விஜயகாந்த் அவர்களின் திருவுருவருவப்படத்திற்கு தனது அஞ்சலியை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |