நுவரெலியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் நுவரெலியா மாவட்ட அரச அதிபருமான நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நுவரெலியா மாவட்டத்தில் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் நோக்கில் 17அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 11சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு வாக்குபெட்டிகள் வாக்குசீட்டுகள், ஏனைய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் போன்றவை பலத்த காவல்துறை பாதுகாப்போடு இன்று (13) வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வாக்களிக்க தகுதி பெற்றோர்
நுவரெலியா மாவட்டத்தில் 605,292பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் நுவரெலியா - மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 பேரும் கொத்மலை தொகுதியில் 88,219 பேரும் ஹாங்குரான்கெத்த தொகுதியில் 78,437பேரும் வலப்பனை தொகுதியில் 90,990 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் .
இதேவேளை தேர்தல் கடமைகளுக்காக 10,000 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் 2,500 காவல்துறையினர் மற்றும் இரானுவத்தினர் பணிகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் நு/காமினி மத்திய மகா வித்தியாலயமும், நுவரெலியா மாவட்டச் செயலகமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக செயற்ப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.“ என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |