விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம்
இந்த வாரம் முழுவதும் தமிழர் நகரங்கள் மஞ்சள் சிவப்புக் கொடிகளுடன் காட்சி தருகின்றன.
மாவீர்ர்களை நினைவுகூறுகின்ற பாதை வளைவுப் பதாகைகள் எங்களை அன்றைய தேசத்திற்கே அழைத்துச்செல்கின்றன. பேரூந்திலும் கடைகளிலும் ஆலயங்களிலும் இயக்கப் பாடல்கள் ஒலிக்கின்றன.
விடுதலைப் புலிகள் மெளனித்துப் பதினாறு ஆண்டுகள். எவருடைய தலையீடுமின்றி மக்கள் மிக இயல்பாக அவர்களை நினைவு கொள்கிறார்கள்.
இது மாவீரர்களுக்கான அஞ்சலி என்பதுடன் தேசம்மீதான தாகமும் தான். அத்துடன் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றவர்களுக்கும் பாசிசவாதிகள் என்றவர்களுக்குமான மிகச் சரியான பதிலையே மக்கள் வழங்குகின்றனர்.
மாவீரர் நாள்
இன்று மாவீரர் நாள் நவம்பர் 27 ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் பண்பாட்டுச் சிறப்பு மிக்க நாள். ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மகத்துவமான நாள். தமிழீழ விடுதலைக் கனவை சுமந்து மக்களுக்காக மாண்டு போன வீர மறவர்களுக்கு அஞ்சலி செய்கின்ற உன்னத நாள்.
விடுதலைக்காய், சுதந்திரத்திற்காய் போராடி மாண்டு குழிகளில் விழித்திருக்கும் எங்கள் வீர மறவர்களை நினைந்து விழியால் நீரேற்றி விளக்கெரித்து, அஞ்சலி செய்கின்ற அற்புத நாள்.
உலகில் கல்லறைகள்மீது சப்பாத்துக்களால் மிதித்துக் குடியிருந்த ஒரே ஒரு இராணுவம் ஸ்ரீலங்கா இராணுவம்மதான். உலகில் கல்லறைகள்மீது முகாம் எழுப்பிய ஒரே ஒரு நாடும் ஸ்ரீலங்கா தான்.
இறந்த எதிரிகளைக்கூட தம் இராணுவ மரியாதையுடன் அணுகுவதுதான் சிறந்த யுத்த வீரர்களின் மாண்பாக இருக்கும். அதற்குச் செயல்வடிவமாக விளங்கியவர்கள் புலிகள். போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளாகியும் “எமது துப்பாக்கிகைளை மௌனிக்கிறோம்..” என்று கூறிய விடுததலைப் புலிகளின் கல்லறைகளுடன் ஸ்ரீலங்கா அரசு யுத்தம் செய்துகொண்டே இருக்கிறது.
கல்லறைகளுடன் யுத்தம் செய்கிற அரசின் கீழ் ஈழத் தமிழர்கள் எப்படித்தான் வாழ்வது? ஸ்ரீலங்கா அரசு, ஈழப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதாக அறிவித்தது.
2009 மே மாதம்.. ஈழ மக்கள் தோல்வியில் துவண்டிருந்த காலம். அப்போது சில இணையத்தளங்கள் “மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் புல்டோசரால் அழிக்கின்றன..” என செய்திகளை புகைப்படங்களுடன் வெளியிட்டது.
அதனை அறிந்த ஈழத் தமிழ் மக்கள் பலரும் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளானார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்ததன் வாயிலாக ஸ்ரீலங்கா அரசு ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வெறுப்புக்கும் எதிர்ப்புக்கும் உள்ளானது.
கல்லறை அழிப்பு
கல்லறைகளை அழிப்பது மாண்பல்ல உண்மையில் போரில் இறந்த எவரையும் மதிக்க வேண்டும். அதுவே போரின் மாண்பாக கொள்ளப்படுகின்றது. போரில் இறந்த இராணுவத்தின் உடலங்களை, மரியாதையாகவே விடுதலைப் புலிகள் அரச தரப்பிடம் கையளிப்பதுண்டு.
அரசு அதை ஏற்க மறுத்தால், உரிய இராணுவ மரியாதையுடன் சிங்கள இராணுவத்தின் சடலங்களை விடுதலைப் புலிகள் அடக்கம் செய்த நிகழ்வுகள் பல நடந்திருக்கின்றன. அப்படிப்பட்ட விடுதலைப் போராளிகள் விதைக்கப்பட்ட நிலத்தை இனவெறியுடன் உழுது பகைமை தீர்த்துள்ளது சிங்கள அரசு.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் சுமார் ஏழு வருடங்களின் பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டில் துயிலும் இல்லங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு துயிலும் இல்லங்களை துப்புரவு செய்து, விடுதலைப் புலிகள் காலத்தில் மாவீரர் தினம் இடம்பெற்றதைப் போன்று அதே மரபுடன் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
உண்மையில் இவ்வாறு மக்களை அழுது அஞ்சலி செலுத்த இடமளிப்பது ஈழ மக்களின் மனங்களை ஆற்றிக் கொள்ள உதவும். துயிலும் இல்லம் என்பது மக்கள் கூடி அஞ்சலி செய்து தம்மை ஆற்றிக்கொள்ளுகின்ற நிலம் மாத்திரமே.
2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 2019ஆம் ஆண்டு வரையில் நான்கு ஆண்டுகளாக மாவீரர் நாள் நிகழ்வுகள் துயிலும் இல்லத்தில் நடைபெற்றன. கடந்த ஆண்டு ஜனாதிபதியாக கோட்டாபாய ராஜபக்ச பதவியேற்ற சூழலில்கூட மாவீரர் தினம் அவ்வாறே நடைபெற்றது.
அப்போது நாளுமன்றத் தேர்தலை நடாத்த கோத்தபாய திட்டமிட்ட நிலையில் அந்த நிகழ்வுகளை தடுக்க முனையவில்லை என்றும் கருதலாம்.
தமிழ் மக்களின் தேர்வு
ஆனாலும் தமிழ் மக்களின் தேர்விலும் தீர்ப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. கண்ணீரால் இத்தீவு பிரிந்துவிடுமா? எமது மக்கள் கண்ணீர் விடவும் எமது உறவுகள் விதைக்கப்பட்ட நிலத்தில் விழுந்து அழுது தொழவும் அனுமதி இல்லை என்றும் அது பயங்கரவாதம் என்பதும் எவ்வளவு மோசமான செயல்?
எங்கள் தாய்மாரின் கண்ணீர் இந்த தீவை இரண்டாக்கி விடுமா? நாங்கள் எங்கள் வீரர்களுக்காக ஏற்றும் விளக்குகள் உங்கள் ஆட்சியை கவிழ்த்துவிடுமா? போரில் மாண்டு போனவர்களுக்காக கண்ணீர் விட அனுமதிக்காத நாட்டில் நல்லிணக்கம் என்று பேசுவது பெரும் ஏமாற்றுவேலையல்லவா? எப்படி அந்த நல்லிணக்கம் சாத்தியமாகும்? தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த சிங்கள இராணுவத்தை பெரும் வீரர்களாக சித்திரித்துக் கொண்டு தமிழர்களின் அழும் உரிமையை கண்ணீர் விடும் உரிமையை மறுக்க முடியுமா?
இன்றைய அனுர அரசும் இந்த விடயத்தில் கடந்த கால அரசுபோல மௌனித்திருக்கிறது.மாவீரர் நாளை தடுத்த கோத்தபாய அரசு ஒரு சில வருடங்களுக்கு மேல் நிலைக்கவில்லை என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும். இந்த மண்ணில் விதைக்கப்பட்ட கல்லறைகள் என்பது வெறும் சீமெந்து அறைகளல்ல.
அது ஒவ்வொரு தாயின் கருவறைக்கும் ஈடானது. அங்கே விதைக்கப்பட்டவர்கள் சிங்கள அரசுக்கு பயங்கரவாதிகளாகத் தெரியலாம். ஆனால் தமிழ் மக்களுக்குப் பிள்ளைகள். மருத்துவர்களாக, எந்திரிகளாக, ஆசிரியர்களாக வரவேண்டிய பொக்கிசங்களை நாங்கள் விடுதலைக்காக இந்த மண்ணில் விதையாக விதைத்தோம்.
அவர்களை நினைவேந்தல் செய்கின்ற உரிமை என்பது ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை உரிமை. அதனை மறுக்கின்ற உரிமை எவருக்கும் இல்லை என்பதை இந்நாளில் வெளிப்படுத்துவோம்.
மாவீரர் துயிலும் இல்லம்
விழிநீரால் விளக்கேற்றும் தாயகம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கை வைக்கின்ற பொழுதெல்லாம் அது ஸ்ரீலங்கா அரசுமீது தமிழ் மக்கள் கடுமையான வெறுப்புக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகினர்.
அது வரலாற்று திருப்பங்களுக்கு வித்திடும். மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்த தடுப்பதனால் புலிகள் பற்றிய நினைவுகளை இல்லாமல் செய்துவிடலாம் என்று கடந்த கால இலங்கை அரசுகள் நினைத்தமை புலிகள் பற்றிய நினைவுகளை மக்கள் மத்தியில் மேலும் கிளர்த்தின.
இம்முறை இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கூறினார். ஆனால் துயிலும் இல்லங்கள் எவையும் விடுவிக்கப்படவில்லை.
தாயகத்தில் உள்ள 30இற்கு மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களிலும் கோப்பாய், முள்ளியவளை போன்ற இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் மாற்று இடங்களிலும் மாவீரர்களை நினைவேந்தத் தயாராகி வருகின்றன.
காலநிலை சீரற்றுக் காணப்படுகின்றபோதும் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான வகையில் நிறைவுபெற்றுள்ளன. எங்கள் விடுதலைக்கும் கனவுக்கும் தேசத்திற்குமாய் களமாடி மாண்ட மானமாவீரர்களை விழிநீரால் விளக்கேற்றி அஞ்சலிக்கத் தமிழர் தேசம் இன்று தயாராகி வருகின்றது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 27 November, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.