முன்பள்ளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களை நியமிக்க தீர்மானம்
எதிர்காலத்தில் முன்பள்ளிகளுக்கு அரசாங்கம் நிர்ணயித்த தகைமைகளைக் கொண்ட தகுதியான ஆசிரியர்களை நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொமிரிய தேசிய பாடசாலையில் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான 100,000 சிறார்களுக்கு இலவச பாடசாலை புத்தகங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் உரிய பயிற்சியும் டிப்ளோமா கற்கைநெறிகளும் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாலர் பாடசாலை
அரசினால் நியமிக்கப்பட்ட தகுதிகள் உள்ள ஆசிரியர்களுக்கு மாத்திரமே பாலர் பாடசாலைகளைத் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஆரம்பக் கல்வியின் வளர்ச்சிக்காக யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் நாடு முழுவதும் பரவியுள்ள 19,000 பாலர் பாடசாலைகளுக்கு சுமார் 40,000 பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உள்ளடக்குவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
ஆங்கில வழிக் கல்வி
2022 ஆம் ஆண்டில் 13,800 முதன்மை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது மாத்திரமல்லாமல், 2023 ஆம் ஆண்டிலும் அதே அளவான பயிற்சியை வழங்க திட்டங்களைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவை மாத்திரமல்லாமல், பாடசாலைகளில் தரம் ஒன்றிலிருந்து ஆங்கில வழிக் கல்வியை நடைமுறையில் அறிமுகப்படுத்தும் விசேட வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
