அமெரிக்காவின் இலங்கைக்கான வரி: ஜனாதிபதி அநுர வெளியிட்ட நற்செய்தி
சமீபத்தில் விதிக்கப்பட்ட வரிகள் குறித்து அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்ததாகவும், அதன் விளைவுகள் விரைவில் ஒரு கூட்டு அறிக்கையில் முறையாக வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற பேரணியில் உரையாற்றும் போது ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னர் அறிவித்த வரிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில், இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் அறிக்கை
பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் அனில் ஜெயந்த, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடனான கடிதப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தியிருந்தார்.
இலங்கை பிரதிநிதிகள் குழுவில் வெளியுறவு, வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பேச்சுவார்த்தைகளின் உள்ளடக்கம் அல்லது எதிர்பார்க்கப்படும் நிவாரணத்தின் தன்மை குறித்து அரசாங்கம் இன்னும் விரிவாகக் கூறவில்லை, ஆனால் வரவிருக்கும் கூட்டு அறிக்கை முன்னோக்கி செல்லும் வழியை தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
