இன்று காலை நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு (UAE) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று(13) காலை நாடு திரும்பியுள்ளார்.
2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி பல அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் நேற்று (02) மாலை உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றியிருந்தார்.
உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
உரையாற்றிய ஜனாதிபதி
எனவே தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்திருந்தார்.
அத்துடன் சமூக நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியானது தரமிக்க தேசமொன்றைப் போன்றே வளமிக்க உலகமொன்றுக்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது என குறிப்பிட்டார்.
மேலும், உடன்படிக்கைகளையும் சட்டங்களையும் முறைசார்ந்தவகையில் நடைமுறைப்படுத்துவதும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் உறுதி நிலையற்ற சமுதாயங்களுக்கு முறைப்படி ஒத்துழைப்பினை வழங்குவதும், உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக சுதந்திர ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)