ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு விஜயம்: வெளியானது அறிவிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) வியட்நாம் பயணம் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி அநுர மே 4 முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்திப்புகள்
அத்துடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பல மூத்த பிரமுகர்களைச் சந்திக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை, ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதுடன், அதன்போது அவர் முக்கிய உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வணிக சமூகத்துடனும் ஜனாதிபதி ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரச அதிகாரிகள் குழுவினரும் விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
