போராட்டக்காரர்களை பாராட்டிய ரணில்! மீண்டும் ஒன்றிணைய அழைப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான பக்கங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனை தொடர்பில் தென்னிலங்கை பிரதம சங்கநாயக வண. கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையுடன் நேற்று (05) பிற்பகல் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் பல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்ட அதிபர் ரணில், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொண்டுவருவது மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதை நினைவுகூர்ந்தார்.

தேசிய மக்கள் சக்தி (ஜாதிக ஜனபல வேகய), மக்கள் விடுதலை முன்னணி ( ஜனதா விமுக்தி பெரமுன) உள்ளிட்ட சில கட்சிகளுடன் மாத்திரமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என அதிபர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் எனக்கு எதிரானவர்கள் அல்ல

இதன்போது அதிபர் மேலும் தெரிவிக்கையில், “ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு குழுவினர் அல்ல. பல குழுக்கள். இவர்கள் அனைவரும் எனக்கு எதிரானவர்கள் அல்ல.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினர் இன்றும் வந்து கலந்துரையாடினர். அனைத்து அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களும் எங்களுடன் கலந்துரையாடுகிறார்கள். எதிரானவர்கள் இருக்கலாம். ஆனால் எல்லோரும் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். நான் அதை பாராட்டுகிறேன்.

ஆனால் சில நேரங்களில் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. நாம் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், என்னுடன் காலையில் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் வன்முறையால் போராட்டத்தை விட்டு வெளியேறினர் என்று கூறினார்கள். பல்வேறு அமைப்புகள் இதனைக் கூறுகின்றன.
அதிபர் மாளிகைக்குள் புகுந்து செய்த செயலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்டதொன்றல்ல. அது எங்களின் பொதுச் சொத்து. அங்கே தொலைந்து போன சில விஷயங்கள் மீண்டும் கிடைக்காது.
அதிபர் மாளிகையும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கைகளில், அலரி மாளிகையும் அவர்களின் கைகளில், இறுதியாக பிரதமர் அலுவலகம் வரை அது சென்றது. அரசாங்கத்தை எப்படி நடத்துவது. என் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் அது முடிந்தது. அதையும் நாம் கண்டிக்க வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் யாரும் அதனைக் கண்டிக்கவில்லை.
போராட்டக்காரர்கள் என் மீது கோபப்படலாம்

அடுத்து இவர்கள் நாடாளுமன்றத்திற்கு வர முயற்சித்தனர். அங்கு வந்ததும், நான் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் என்று கூறினேன். பின்னர் பிரதமர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கேயும் சுட வேண்டாம் என்றேன். மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்தார்கள். அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்கச் சொன்னேன். நாடாளுமன்றத்தைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது.
அவர்கள் என் மீது கோபப்படலாம். ஆனால் எம்முடன் கலந்துரையாடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எதிர்காலம் ஒன்றை வழங்க வேண்டும். அவர்கள்தான் சிஸ்டம் சேன்ஜ் பற்றி பேசுகிறார்கள். அவர்களை நாம் பாராட்டுகிறோம். இப்போது நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
சட்டத்தை மீறியவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது

சட்டத்தை மீறியவர்களையும் ஏனையவர்களையும் இப்போது எப்படி தேர்ந்தெடுப்பது? இங்கு ஒரு சிக்கல் உள்ளது.
போராட்டத்தால் நல்ல விடயங்களும் நடந்தன. மோசமான விடயங்களும் நடந்தன. நல்லதை மட்டும் வைத்துக்கொண்டு கெட்ட பக்கத்தை தள்ளி வைப்போம்.
சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பின் கலந்துரையாடி அதனைத் தீர்த்துக்கொள்வோம்” என்றார்.
You May like this
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்