ரணில் - பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் சந்திப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லண்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிரித்தனியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல்
பொதுநலவாய நாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லண்ணுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளதாக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் மூலோபாயங்கள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுநலவாய நாடுகளின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது, கருத்துப் பரிமாறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
உலகத் தலைவர்களுடனான உச்சி மாநாடு
இதேவேளை, பிரித்தனியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
இவற்றைத் தொடர்ந்து, எதிர்வரும் 25 ஆம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது
