இந்திய உதவியுடன் திருமலையில் பாரிய திட்டம் - ரணில் திடீர் களஆய்வு
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (14) திருகோணமலை துறைமுக பகுதிக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டு அங்கு ஆய்வுகளை நடத்தியுள்ளார்.
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு அது மூலோபாய துறைமுகமாக மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டம்
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் (Surbana Jurong plan) தொடர்பில் திருகோணமலை ஒர்ஸ் ஹில்லில் (Orr’s Hill) இன்று (14) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போது இவ்வாறு கூறிய அதிபர் ரணில் விக்ரமசிங்க,
திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டமானது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லையென்றும் இது அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்றும் தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி
இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்க முற்பட்டபோது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளை நினைவுகூர்ந்த அதிபர், அன்று எண்ணெய் தாங்கிகளை வழங்கியிருந்தால், இன்று நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் தெரிவித்தார்.
திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை சிங்கள வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ள நகர்வும் அந்த மாவட்டத்தின் வடக்கேயுள்ள ஒரு பெரும் நிலப்பரப்பை அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைத்துவிடும் திட்டங்களும் உற்றுநோக்கலை ஏற்படுத்திவரும் நிலையில், ரணிலின் இந்தப்பயணமும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.