மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்கள் சுங்கத்தால் பரிசோதிக்கப்பட்டவை! ஜப்பானில் அநுர விளக்கம்
மித்தெனியவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கொள்கலன்கள் சுங்கத்தால் பரிசோதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அங்குள்ள இலங்கையர்களைச் சந்தித்து உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுக்களை பாதுகாப்பதற்காக தனியான ஒரு அரசாங்கம் இயங்கி வருவதாகவும் அதனை வெகு விரைவில் ஒழிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள்
ஜப்பானில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் இலங்கையர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “ கொள்கலன்கள் நெருக்கடிக்குள்ளான சந்தரப்பங்களில் அவற்றை பரிசோதித்து விடுவிப்பதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் மூலம் நம்பிக்கையின் அடிப்படையில் கொள்கலன்கள் சோதனைக்குட்படுத்தாமல் விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு 13 தடவைகள் நடந்துள்ளன. ஆக ஏற்கனவே நடந்த இந்த 13 சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட வேண்டும்.
ஏதேனும் குறைபாடுகள் நிகழ்ந்துள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது எங்களுடைய பொறுப்பு.
இது தொடர்பிலான விசாரணைகளுக்கு நாங்கள் குழுவொன்றை நியமித்தோம். அதன்மூலம் எங்களுக்கு அறிக்கை ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளோம்.
விசாரணைகள் துரிதம்
இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு உள்ளதாக கூறப்படும் கருத்துக்கள் அனைத்துமே உண்மைக்கு புறம்பானவை.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கொள்கலன்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவை ஆகும்.
ஆகவே, சோதனைக்குட்படுத்தப்பட்ட கொள்கலன்களிலும் சிக்கல்கள் காணப்பட்டுள்ளன. அதற்கான பதிலை தான் தேடி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
