மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: அடுத்த மாதம் முதல் வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில்
2022/2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அதிபர் நிதியம் (President's Fund) தெரிவித்துள்ளது.
அதன்படி மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை 2024 மே முதல் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிதியம் அறிவித்துள்ளது.
6000 ரூபா வீதம்
அதன்படி, மார்ச் 2024 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாதாந்தம் 6000 ரூபா வீதம் 24 தவணைகளுக்கு இந்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும்.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல்கள் அதிபர் நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.presidentsfund.gov.lk) அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும்.
மேலதிக விபரங்களுக்கு அதிபர் நிதியத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை (www.facebook com/president.fund) விரும்புதல் அல்லது பின்தொடரல் செய்யுமாறு அதிபர் நிதியம் அறிவித்துள்ளது.
ஒரு இலட்சம் மாணவர்களுக்கு
மேலும், தரம் 1 முதல் தரம் 11 வரை பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான ஒரு இலட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் அதிபர் புலமைப்பரிசில் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தற்போது முடிவடைந்துள்ளதுடன், புலமைப்பரிசில் பெறத் தகுதிபெற்றோரின் பட்டியல் எதிர்வரும் நாட்களில் வலய மட்டத்தில் அதிபர் நிதியத்திற்கு கிடைக்கவுள்ளது.
இந்தப் பட்டியல்களைப் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வீதம் 12 மாதாங்கள் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இந்தப் புலமைப்பரிசில் தொகையும் 2024 மே மாதம் முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |