இலங்கைக்கு பல நன்மைகளை தரப்போகும் அதிபரின் இந்திய விஜயம்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஜூலை 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்குத் தேவையான செயற்பாடுகளை நிறைவு செய்வதே அதிபரின் இந்திய விஜயம் என அமைச்சரவைப் பேச்சாளர், ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்புத் திட்டம்
இரு நாடுகளும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றன.
இந்த விஜயத்தின் போது, அதிபர் விக்ரமசிங்க, இந்திய அதிபர் திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளுடன் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் முன்னேற்றும், பலப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, இரு நாடுகளுக்கிடையிலான கடன் மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசாரத் துறைகளின் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது, கொவிட் -19 தொற்றுநோய்களின் போது அண்டை நாடான இந்தியா பெரிய அளவிலான உதவிகளை வழங்கியதை நினைவு கூர்ந்த அமைச்சர் , இச்சந்திப்பு பொருளாதார நெருக்கடிகளை ஈடு செய்வதற்கான வாய்ப்புகளையும் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.