ரணிலின் இந்திய விஜயம் - வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட தகவல்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கான உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் சிறிலங்கா அதிபரின் இந்திய பயணம் அமையவுள்ளது.
மோடியின் அழைப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஸ்தாபித்ததன் 75ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடும் வகையில் அதிபரின் இந்த விஜயம் அமைவுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.
இந்த விஜயத்தின் போது, அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்திய அதிபர் ஸ்ரீமதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஏனைய இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் முன்னேற்றமடையச் செய்து, பலப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.